Wednesday, November 14, 2007

பொருட்பால் -அங்கவியல் -பெண்வழிச் சேறல் -91

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

இன்பங்காரணமாகத் தன் மனையாளை விரும்பி, அவள்வழி நடப்பவர் அறப்பயன்களை அடையமாட்டார்; பொருள் சேர்க்க முயல்வோரும், தம்முயற்சிக்கு விரோதமென்று இகழ்ந்து ஒதுக்கும் பொருளும் அவ்வின்பமே ஆகும்.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விரும்புகின்றவனது செல்வம், இவ்வுலக ஆண்மக்களுக்கெல்லாம் பெரியதொரு நாணமாக வெட்கம் தரும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

ஒருவன் தன் இல்லாளிடத்து தாழ்ந்தற்கு ஏதுவான அச்சம், அவ்வச்சமில்லாத நல்லாரிடத்து செல்லுங்கால், எந்நாளும் நாணுதலையேக் கொடுக்கும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையான்மை வீறெய்தல் இன்று.

தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனில்லாதவனுக்கு, ஒரு செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப்படாது.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

தன் மனையாளுக்கு அஞ்சி நடப்பவன், தானே தேடிய பொருளேயாயினும், அப்பொருளால் நல்லவர்களுக்கு நல்லவைகள் செய்ய எந்நாளும் அஞ்சுவான்.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

தன் இல்லாளுடைய மூங்கில் போன்ற தோளுக்கு அஞ்சி நடப்பவர், வீரத்தால் சுவர்க்கமடைந்த தேவர் போல வாழ்ந்தாலும், ஆண்மையற்றவரே.

இமையார் -தேவர்
பாடிலர் -ஆண்மையற்றவர்


பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண்தன்மையைக்காட்டிலும், நாணத்தையுடைய அவளின் பெண்தன்மையே மேன்மை உடையது.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

தம் மனையாள் விரும்பியபடியே நடப்பவர், தம் நண்பர்களின் குறையைத் தீர்க்கமாட்டார்கள்; மறுமைக்கு வேண்டிய அறங்களையும் செய்யமாட்டார்கள்.

நட்டார் -நண்பர்

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.

அறச்செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருட்செயல்களும், பிற இன்பச்செயல்களும், தம் மனையாளின் ஏவலைச் செய்வாரிடத்து உண்டாகா.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

கரும ஆலோசனைகளில் சென்ற மனத்தையும், அதனாலாகிய செல்வத்தையும் உடையவர்க்கு, மனையாளைச் சேர்தலால் விளையும் அறிவின்மை எக்காலத்தும் உண்டாகாது.

No comments: