Monday, November 12, 2007

பொருட்பால் -அங்கவியல் -மன்னரைச் சேர்ந்தொழுகல் -70

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

மாறுபடுதலையுடைய அரசரைச் சேர்ந்து வாழும் மந்திரிகள், அவரை விட்டு நீங்காமலும், மிக நெருங்காமலும் நெருப்பிற் குளிர் காய்வார் போல் நிற்கக் கடவர்.


இகல் -மாறுபடும் இயல்புடைய


மன்னர் விழைய விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்.

தம் அரசரால் விரும்பப்பட்டவைகளைத் தாம் விரும்பாதிருத்தல், அவ்வரசராலே நிலைப்பெற்ற செல்வத்தை மந்திரிகளுக்குக் கொடுக்கும்.

மன்னிய -நிலைப்பெற்ற

ஆக்கம் -செல்வம்


போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

அரசன் சினம் கொண்டால் அவரைத் தெளிவித்தல் அரிதானதால், மந்திரிகள், அரிய பிழைகளிடமிருந்து தம்மைக் காக்க வேண்டும்.

போற்றல் -காத்தல்

கடுத்தபின் -சந்தேகித்தபின்பு

தேற்றல் -தெளிவித்தல்


செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் இருக்கும் அரசவையில், காதோடு பேசுவதையும், பிறரை நோக்கி நகைத்தலையும் நீக்கிவிட வேண்டும்.

அவித்து -நீக்கி
ஆன்ற -நிறைந்த


எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

அரசனின் ரகசியங்களை செவிகொடுத்துக் கேளாமலும், அது தொடர்பாக ஏதும் வினவாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்க வேண்டும்.

ஓரார் -கேளாமல்

மறை -ரகசியம்

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

அரசனது உள்ளக் குறிப்பை அறிந்து, ஏற்ற காலத்தையும் பார்த்து, வெறுப்பில்லாதனவும், வேண்டுவனவுமாகிய காரியங்களை அவன் மனம் விரும்பும் வண்ணம் சொல்லல் வேண்டும்.


வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

அரசன் விரும்புவனவற்றுள் பயனுள்ள காரியங்களை மட்டும் சொல்லி, எந்த நாளும் பயனில்லாதவைகளை, தானே கேட்டாலும் சொல்லாது விட வேண்டும்.

வேட்பன -விரும்புவன

எஞ்ஞான்றும் -எந்நாளும்

இனையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்.

அரசரை, இவர் தம்மைவிட 'இளையவர்' என்று கருதியோ, 'இன்ன முறையினர்' என்று கருதியோ இகழாமல், நிலை பெற்ற அறிவு ஒளியுடன் அவரிடம் நடந்து கொள்ள வேண்டும்.

இனையர் -இளையவர்

இனமுறையர் -இன்ன முறையினர்


கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

அசைவற்ற அறிவுடையோர், 'தாம் அரசரால் நன்கு மதிக்கப்பட்டோம்' என்று கருதி, அவர் விரும்பாதவைகளை ஒரு போதும் செய்யமாட்டார்கள்.

துளக்கற்ற -அசைவற்ற


பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

அரசனுக்கு 'மிகப் பழையகாலத் தொடர்புடையோர்' என்றெண்ணி, பண்பற்ற காரியங்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை அவனுக்கேக் கெடுதல் தரும்.

கெழுதகைமை -உரிமை

No comments: