Wednesday, November 14, 2007

பொருட்பால் - நட்பியல் - பகைத்திறம் தெரிதல் -88

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

தீங்கு விளைவிக்க் கூடிய பகை என்னும் பண்பை விளையாட்டாகக் கூட விரும்ப வேண்டாம்.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

வில்லில் சிறந்த வீரனைப் பகைத்தாலும், சொல்லில் சிறந்தவனைப் பகைக்க வேண்டாம்.

ஏர் உழவர் - நிலத்தை ஆழ உழுது பயன் விளைவிக்கும் உழவனைப் போன்ற

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

தனி ஆளாய் நின்று பலரின் பகை கொள்பவர் அறிவு நிலை தவறியவரை விடவும் குறைந்த அளவே அறிவுடையவர்.

ஏமுற்றவர் - பித்துப் பிடித்தவர்
தமியன் - தனித்தவன்


பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

தன் பகைவரையும் நண்பராக்க் கொள்ளும் பண்புடையவனின் பெருமையால் உலகம் தழைத்திருக்கிறது.

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

துணையில்லாதவன் இரு பகைவரை எதிர் கொள்ள நேர்ந்தால் அவர்களில் ஒருவரை நண்பராகக் கொள்ள வேண்டும்.

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

பகைவரின் திறம் அறிந்தாலும் அறியா விட்டாலும் தன் வலிமை குறைந்த பொழுது நெருங்காமலும், விலகாமலும் நிற்க வேண்டும்.

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

தன் துன்பத்தை அறியாத நண்பர்களிடம் அதைப் பற்றி சொல்லக் கூடாது. தன் குன்றிய வலிமையை பகைவருக்கு வெளிப்படுத்தக் கூடாது.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

தன்னால் இயன்ற செயல் அறிந்து, அதனைச் செய்து தன்னைக் காத்துக் கொள்பவனின் பகைவருக்கு (அவரை வெல்வோம் என்ற) செருக்கு மாய்ந்து விடும்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

பயனற்ற முள் மரம் இளையதாக இருக்கும் போதே களைந்து விட வேண்டும். இல்லை எனில் வளர்ந்த மரம் களைபவரின் கையை காயப்படுத்தி விடும்.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

பகைவரின் தருக்கை சிதைக்க இயலாதவர் உயிர்த்திருப்பது போல் பொதுவில் தோன்றினாலும் செத்தவராகவே கருதப் படுவர்.

No comments: