Sunday, November 11, 2007

பொருட்பால் -அங்கவியல் -வினைத்தூய்மை -66

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.

துணையினது நன்மையானது செல்வம் ஒன்றையேக் கொடுக்கும்; தொழிலினது நன்மையானது வேண்டியவைகளை எல்லாம் கொடுக்கும்.


என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

புகழுடன் நன்மையும் தராத செயல்களை எக்காலத்திலும் செய்யாமல் விலக்க வேண்டும்.

ஒருவுதல் -ஒழித்தல்


ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதுவும் என்னு மவர்.

மேலாக உயர எண்ணுபவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எத்தகைய செயலையும் செய்யாமல் விலக்க வேண்டும்.

ஆதும் -மேலாக்கடவோம்
மாழ்கும் -கெடும்
ஓதல் -ஒழித்தல்


இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

அசைவற்ற தெளிந்த அறிவுடையார், தாம் இடையூறுகளுக்குள்ளாக நேர்ந்த போதும், இழிவான செயல்கள் எதையும் செய்யமாட்டார்.

இளி -இழிவு


எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

'என்ன செய்தோம்' என்று பின்னர் வருந்தக்கூடிய செயல்களை செய்யக் கூடாது. அவ்வாறு செய்யினும் பின் அதுகுறித்து வருந்துதலைச் செய்யாதிருத்தலே நலமாகும்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

பெற்றத் தாய் பசித்திருக்கக் கண்டபோதும், ஒருவன் மேலோர் பழிக்கும் செயல்களைச் செய்யக் கூடாது.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தில் சான்றோர்

கழிநல் குரவே தலை.

பழிச்செயல்களால் விளைந்த பெருஞ்செல்வத்தை விட, சான்றோர்களது வறுமையே மிகவும் சிறந்தது.

கழிநல்குரவு -மிகுந்த வறுமை


கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

செய்யத்தகாதவை என்று சான்றோர்களால் ஒதுக்கப்பட்ட செயல்களை ஒருவன் விலக்காமல் செய்வானாயின் அது நன்மையில் முடிந்தாலும், தீமையே தரும்.

கடிந்த -நீக்கிய
கடிந்து ஓரார் -விலக்கார்
பீழை -துன்பம்


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

பிறர் அழும்படியாகத் தான் பெற்ற பொருள்கள் எல்லாம், தம்மை அழ வைத்து அகன்று போகும்; நல்வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின் பயன் தரும்.

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

தீயவழிகளில் பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது பசுமண் கலத்தில் நீரூற்றி அதனைக் கசியாமல் காத்தலைப் போன்றது.

இரீஇ - காத்தல்

No comments: