Saturday, November 17, 2007

பொருட்பால் - ஒழிபியல் - கயமை -108

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

கயமைத் தனம் நிறைந்தவர் மனிதரல்லர். அவ்வாறு கீழான உயிர்களும் மனிதர் போலவே தோற்றமளிப்பது வேறு எங்கும் காண்பது அரிது.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

நன்மை அறிந்து செய்பவர் அது குறித்து கவலையுடன் சிந்தித்திருப்பர். கயவர்களோ அப்படி கவலை கொள்ள தேவையில்லை ஆதலால் கொடுத்து வைத்தவர்கள்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

தாம் நினைப்பதை செய்து வருவதால் தேவர்களும், கயவர்களும் ஒரு தன்மை உடையவரே. என்ன, கயவர்கள் பிறருக்கு தீமை செய்வார்கள்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

தம்மினும் சிறியோரைக் கண்டால் அவரை விடத் தாம் மேல் என்று கர்வம் கொள்வார் கீழ் மக்கள்.

அகப்பட்டி - உள் அடங்குவர், தம்மினும் கீழோர்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

தமது தவறுக்கு கிடைக்கும் தண்டணை குறித்த அச்சமும், தாம் விரும்பிய பொருளுக்காகவும் சிறிதளவு ஒழுக்கத்தைக் கடை பிடிப்பர்.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

தாம் கேட்ட பிறர் அறியாத செய்திகளை கயவர் உடன் பிறருக்கு சொல்லி விடுவர் (தம்மை பெரியவனாக காட்டுதற்காக). அவ்வகையில் அவர்கள் பறை அறிவிப்பவனை ஒத்தவர்கள்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

எளியவர்களுக்கு (பருக்கை விழுந்து விடும் என்று) தம் எச்சில் கையால் கூட இல்லை என ஆட்டாதவர்கள், கையை முறுக்கி கன்னத்தில் குத்து விடும் வன்மை நிறைந்தவர்களுக்குத் தருவர்.

கொடிறு - கன்னம், கதுப்பு

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

சான்றோரிடம் தம் தேவையை சொன்னாலே நடவடிக்கை எடுப்பர். கயவரோ, கரும்பைப் பிழிவது போல் பிழிந்தால் தான் பயன்படுவர்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

கயவர் பிறர் நன்கு உடுப்பதையம், உண்பதையும் கண்டாலே பொறாமையால் குற்றம் கற்பிக்க வல்லவர்கள்.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

தமக்கு வந்த துன்பத்தைக் காரணம் காட்டி ஆதாயம் தேடுவதைத் தவிர கயவரால் இயலுவது வேறு ஏது?

No comments: