Wednesday, November 14, 2007

பொருட்பால்-நட்பியல் -இகல்-86

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

எல்லா உயிருக்கும் கூடாமை என்னும் பண்பின்மையாகிய தீயதை வளர்க்கும் நோயாக மாறுபாடு( வெறுப்பு) இருக்கிறது என்று நூலோர் உரைப்பர்.

பாரிக்கும் - வளர்க்கும்
இகல் - மாறுபாடு


பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

கூடாமையை கருதி பிடிக்காதவைகளை செய்தாலும் பரவாயில்லை இன்னாமை என்னும் துன்பத்தை இகலைக்கருதி செய்யாமல் இருத்தல் தலைசிறந்தது.


இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

ஒருவன் இகல் என்னும் தன்மனத்திலிருந்து நோயை நீக்கினால் அழிவில்லா புகழை பெறுவான்.

தவல் - அழிவு
தாவில் விளக்கம் - கெடுதலில்லா புகழ்


இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

இகல் என்னும் துன்பத்துள்ளே கொடுமையான துன்பம் ஒருவனிடம் கெடின்( இல்லாமலிருப்பின்) அவனுக்கு இன்பத்துள்ளே மிகவும் இனிமையான வாழ்வு பயக்கும்.

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.

மாறுபாடு என்னும் வெறுப்பை எதிர்ந்து வாழ்வோரே வெல்லும் தன்மை உடையவர்.
மிகல் ஊக்கும் - வெல்ல நினைக்கும்.


இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

இகல் எனப்பாடும் வெறுப்பு இனிது என்பவன் வாழ்க்கையில் கெடுதலும், பிழைபடுதலும் உடனே வரும்.

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

இகலோடு இன்னா செய்யும் அறிவுடையவர் வெற்றி பெறுதலுக்கான மெய்ப்பொருளை கண்டு உணரமாட்டார்.


இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

இகலை எதிர்த்து வாழ்தல் ஆக்கமாம் அதனை ஊக்குவித்து வாழ்பனுக்கு கேடும் ஊக்கமாய் வரும்.

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

ஆக்கம் வரும் காலத்தில் இகலை ஒருவன் காணமாட்டான். தனக்கு தானே கேடு நினைப்பவனுக்கு அதை அதிகமாய் காண்பான்.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

இன்னாத எல்லாம் இகலிருப்பனுக்கு இருக்கும். நல் நயம் என்னும் பெரும் செல்வம் நட்பொன்றிலே வந்து சேரும்.

நகலான் - நட்பில்

No comments: