Friday, November 16, 2007

பொருட்பால் - ஒழிபியல் - பண்புடைமை - 100

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

அணுகுவதற்கு எளியவராயிருந்தால் யாவரும் பண்புடைமை என்னும் பண்பை எளிதில் பெற்றிடலாம்.

எண்பதம் - எளியவராய் இருத்தல்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

நல்ல குடியில் பிறத்தலும், அன்புடன் பழகுவதும் பண்புடைமை எனப்படும்.

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

மனித உறுப்புகள் ஒத்திருப்பதால் மட்டும் ஒருவர் மனிதர் ஆக மாட்டார். நற்பண்புகள் ஒத்திருப்பதால் ஒருவர் மனிதர் எனப்படுவார்.

வெறுத்தக்க - நெருங்கத் தக்க

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

நீதி வழுவாமல் நன்மை செய்யும் பயனுடையவரின் பண்பை உலகம் பாராட்டும்.

நயன் - நீதி

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

சிரித்து மகிழும் பொழுதும் இகழ்வது துன்பம் தருவதாகும். ஆதலால் பண்பாளர்கள் பகைவரிடமும் பண்புடன் நடந்து கொள்வார்கள்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

பண்புடையவர்கள் இருப்பதால் இவ்வுலகம் உயிர்ப்போடு இருக்கிறது. இல்லையெனில், உலக வழக்கு மண்ணில் புதைவது உறுதி.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

அரம் போன்ற கூர்மையான அறிவுடையவர் ஆனாலும் மக்களுக்குரிய பண்பு இல்லை எனில் உணர்வற்ற மரமாகக் கருதப் படுவர்.

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

நட்புடன் பழகாமல், தீமை செய்பவர் ஆனாலும் அவரிடம் பண்புடன் நடவாமை இழிவானது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

சிரித்து, மகிழ்ந்து பழகாதவர்களுக்கு பெரிய உலகம் பகல் பொழுதிலும் இருண்டு காணப் படும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம், தூய பால் கொண்ட பாத்திரத்தின் தூய்மையற்ற தன்மையால் திரிந்தது போல் கெட்டுப் போகும்.

No comments: