Wednesday, November 14, 2007

பொருட்பால்-நட்பியல்- உட்பகை-89

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

நிழலும் நீரும் ஒருவனுக்கு அடிப்படையாய் இருப்பவை அவை இன்னா செய்யின் கொடும் துன்பம் தரும் அதுபோல இயல்பாய் கூட இருக்கும் இயல்புகள் இன்னா செய்யின் பெரும் துன்பம் தரும்.

தமர் நீர - தழுவவேண்டிய இயல்புகள்( உறவுகள்?)

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

வாள் கொண்டு எதிர் நிற்கும் பகைவரைக்கூட அஞ்ச வேண்டாம் ; அஞ்சுக
உறவினர் போல் மறைந்து நிற்கும் பகைவனை

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

உள்பகையை அஞ்சி நடக்கக்கடவது. அவ்வாறில்லாமல் போயின், தளர்ச்சி வரும் வேளை பார்த்து மண்கலத்தை அறுக்கும் குயவனின் ஆயுதம் போல் தப்பாமல் கெடுப்பர்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

மனம் மாணாத (அகம் திருந்தாத) உட்பகை தோன்றுமாயின் இனம் மாணாத( சுற்றமில்லாமைக்கு ஏதுவாக) குற்றம் பலவும் வந்து சேரும்.
ஏதம்- குற்றம்.


உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

உறவில் முறைத்தன்மையோடு கூடிய உட்பகை தோன்றினால் இறத்தல்(கொலை) முதலான குற்றம் பலவும் வந்து சேரும்.


ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

ஒன்றாமல் போகும் உட்பகை கண் படின் என்னாளும் இறவாமையை பெற முடியாது( கொலை போன்றவை நிகழும்)

பொன்றாமை - இறவாமை

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.

செப்பினது மூடிகளின் சேர்க்கை போல கூடியிருந்தாலும் உள்ளே எவ்வாறு தனித்திருக்குமோ அதே போல் உட்பகை கொண்ட குடியானது உள்ளே கூடாது

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

உட்பகை உற்ற குடியானது அரத்தினாலே தேய்க்கப்பட்ட இரும்பு போல வலிமை தேயும்.

பொருத - தேய்க்கப்பட்ட


எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.

எள்ளின் பிளவை(அவ்வளவு சிறிய) ஒத்த சிறியதாயினும் உட்பகை உள்ளே இருப்பேன் கேடு வந்தே சேரும்.
எள்பக வன்ன - எள பகவு அன்ன - எள்ளின் பிளவை ஒத்த


உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

மனப்பொருத்தம் இல்லாதவர் வாழ்க்கை குடிசைக்குள்ளே பாம்போடு வாழ்தலை ஒத்தது.

குடங்கருள் - குடிசைக்குள்

No comments: