Tuesday, November 13, 2007

பொருட்பால் - அரணியல் - நாடு - 74

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

நிறைந்த விளைச்சலும், அறவழி வாழ்வோரும், குன்றா செல்வம் உடையோரும் கூடி வாழ்வது நாடு.

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

பெரும் பொருளால் அனைவரும் விரும்புவதாகி, கேடு இன்றி நல் உழைப்பால் அமைவது நாடு.

பெள் - விருப்பம்
பெள் + தக்க - பெட்டக்க

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.

தம் நாட்டின் மேல் சுமைகள் ஒருங்கே வந்த போதும் அவற்றைத் தாங்கி அரசுக்கு தங்கள் வரியை செலுத்தும் வல்லவர் நிறைந்தது நாடு.

இறை - வரி

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

துன்புறுத்தும் பசியும், குணமாகாத நோயும், பகைவரும் இல்லாத இயல்பினது நாடு.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

ஒற்றுமை இல்லாத பல குழுக்கள், உள்ளுக்குள்ளேயே இருக்கும் பகை, அரசை அலைகழிக்கும் தொல்லைகள், கொலை செய்யும் கயவர்கள் இல்லாத்தே நல்ல நாடு.

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

கேடு என்பதை அறியாமல், கெட்ட போதும் வளம் குன்றாத நாட்டை நாடுகளில் சிறந்தது என்பர்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

கடல், ஆறு என்ற இருவகை நீர் நிலையும், மலையும், அதிலிருந்து வரும் நீரும், வலுமையான காவலும் ஒரு நாட்டின் இன்றியமையாத உறுப்புகளாகும்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

நோயில்லாமை, செல்வம், விளைச்சல், இன்பம் மற்றும் காவல் ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அணிகலணாம்.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

முயற்சித்து உண்டாக்கும் வளத்தை விட இயல்பாகவே வளத்தினை உடையதே நாடு என்பர்.

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

நல்ல வளங்கள் அமைந்திருந்தும் திறமையாக ஆளும் மன்னன் இல்லையெனில் அவ்வளங்களால் பயன் ஏதும் இல்லை.

No comments: