Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - இடுக்கண் - அழியாமை - 63

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

துன்பம் வரும் போது அடுத்து வருவது நன்மை என்பதால் மகிழ்வு
கொள்ள வேண்டும்.


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளமெனத் துன்பம் வந்த போதும் அறிவுடையவன் தீர்க்கும் வழி
நினைத்ததும் தீரும்.


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

துன்பத்திற்கு துன்பம் ஏற்படுத்தக்கூடியவர் துன்பம் வந்தால் வருந்தாதவர்
ஆவார்.


மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

இடர்பாடுகளை கடந்து செல்லும் எருதினைப் போன்ற ஊக்கம் உடையவனை அடையும் துன்பம் தானே இடையூறை எதிர் கொள்ளும்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

தொடர்ந்து துன்பம் வந்தாலும் குன்றாத உறுதியுடன் எதிர் கொள்பவனிடம் துன்பம் துன்பப் படும்.

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

பெற்ற செல்வத்தைக் எவருக்கும் ஈயாமல் காக்க எண்ணாதவர், பொருள் இல்லாத போது வருந்த மாட்டார்.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

துன்பத்தின் இலக்கு உடம்பு என்பதை உணர்ந்தவர்கள் துன்பத்தில் கலங்காது இருப்பர்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

இன்பத்தை வேண்டாமல், துன்பமும் இயல்பானது எனக் கொள்பவனை துன்பம் வருத்துவது இல்லை.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

இன்பம் வந்தாலும் விரும்பாதவன் துன்பம் வந்தாலும் துன்புறுவது இல்லை.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

துன்பத்தையும் இன்பம் எனப் போற்றுபவனை பகைவரும் விரும்பும் சிறப்பை அடைவார்கள்.

No comments: