Tuesday, November 13, 2007

பொருட்பால் - நட்பியல் - நட்பு - ஆராய்தல் - 80

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

நட்பினை விரும்புபவர் நட்பு கொண்ட பின் தீய நட்பு ஆனாலும் விடுவது இல்லை. ஆதலால் ஆராயாமல் கொள்ளும் தீய நட்பை விட கேடானது வேறு இல்லை.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

பல வழியிலும் ஆராயாமல் கொள்ளும் நட்பு, தீயதாய் இருந்தால், இறுதியில் தான் சாகும் அளவு துன்பத்தைத் தரும்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

ஒருவனின் குணத்தையும், பிறந்த குடியையும், அவன் குறைகளையும், குறையாத சுற்றத்தையும் அறிந்து நட்பு கொள்ள வேண்டும்.

இனன் - சுற்றம்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லும் பழிக்கு அஞ்சுபவனிடம் பொருள் தந்தேனும் நட்பு கொள்ள வேண்டும்.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

பழிக்கும் செயல்களால் வரும் துன்பத்தை எடுத்துச் சொல்பவரா, அத்தகைய செயல் செய்தால் கடுந்து கூறுபவரா, உலக வழக்கை அறிந்தவர்களா என ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.

கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

தாம் கேடு அடைந்த நிலையிலும் தம் அற நிலையில் வழுவாமை தாம் நட்பு கொள்ள அளக்கும் அளவு கோல் ஆகும்.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

அறிவில்லாதவலின் நட்பை விட்டு நீங்குவது ஒருவருக்கு பேறாகும்.

ஊதியம் - பேறு

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

தம் ஊக்கத்தை கெடுக்கும் சிந்தனையை எண்ண வேண்டாம். துன்பத்தில் கை விடுவார் நட்பைக் கொள்ள வேண்டாம்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

தன் துன்பத்தில் தன்னை விட்டு நீங்கியவரின் நட்பை தாம் இறங்கும் தறுவாயில் நினைத்தாலும் உள்ளம் வருந்தும்.

அடு - அழிதல்
காலை - பொழுது

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குற்றம் இல்லாதவரின் நட்பைக் கொள்ள வேண்டும். பொருள் தந்த போதும் தகுதி இல்லாதவரோடு நட்புக் கொள்ள வேண்டாம்.

மருவு - தழுவு
ஒருவு - தவிர்

No comments: