Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல் - 59

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

ஒற்றறிதல், நூல் உரைக்கும் நீதி இரண்டிலும் மன்னன் தெளிந்த தேர்ச்சி உடையவனாய் இருத்தல் வேண்டும்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நாள் தோறும் ஒற்றர் மூலம் அறிந்திருப்பது வேந்தர் கடமை.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

ஒற்றறிந்து வரும் செய்தியின் பயன் தெரியாத மன்னன் வெற்றி காண்பது இல்லை.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

செயலாற்றுபவர், சுற்றத்தார், பகைவர் என்று பாராமல் அனைவரையும் ஆராய்வது ஒற்று எனப்படும்.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பிறர் ஐயுறாத உருவில், ஒற்றறியும் இடத்து சினத்தைக்கு அஞ்சாமல், எவ்வாற்றாகிலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஆராய்வதே ஒற்று.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

பழிக்கஞ்சாது துறவி வேடமிட்டும், புக இயலாத இடத்திலும் புகுந்து எந்த துன்பம் வந்தாலும், தன்னை வெளிப் படுத்தாமல் ஆராய்வது ஒற்று.

இறந்த - புக இயலாத

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மறைவாக நடப்பவற்றை அறிந்தவரிடம் இருந்து கேட்டு தான் அறிந்தவற்றை ஐயமில்லாமல் தெளிவதே ஒற்று.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ஒற்றின் மூலமாக அறிந்தவற்றையும் தேவை இருந்தால் இன்னும் ஒரு ஒற்றறரால் ஒற்றறிந்து உண்மை தெளிதல் வேண்டும்.

ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

ஒரு ஒற்றனுக்குத் தெரியாமல் இன்னொருவன் ஒற்றறியும் படி செய்து, இது போல் மூவர் தரும் செய்தியால் உண்மை தெளிய வேண்டும்.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

சிறப்பாக ஒற்றறிந்ததை பிறர் அறியுமாறு பாராட்டினால், மறைவான செய்தியை வெளிப்படுத்தியதாகும்; ஆகவே, தவிர்க்க வேண்டும்.

No comments: