Monday, November 19, 2007

காமத்துப்பால் - கற்பியல் - புணர்ச்சி விதும்பல் - 129

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

நினைத்த உடன் களிப்பும், கண்டால் மகிழ்வும் கள்ளுண்டவருக்கு இல்லை; காமம் கொண்டவருக்கு உண்டு.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

மிகுந்த அளவு காமம் உண்டானால், தினை அளவும் ஊடல் கொள்ள வேண்டாம்.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அவமதித்து, தான் விரும்பினவற்றையே செய்தாலும் என் தலைவனைக் காணாமல் கண்கள் அமைதி கொள்வதில்லை.

பேணல் - மதித்தல்
பெட்பு - விருப்பம்

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

தோழியே, ஊடல் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தான் தலைவனைக் காணச் சென்றேன். நெஞ்சோ, அதனை மறந்து கூடலை விரும்பி நின்றது.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை எழுதும் போது எழுதும் குச்சியைக் காண இயலாது. அது போலவே, தலைவனைக் கண்டதும் அவன் எனக்குச் செய்த குற்றங்களை மறந்து விடுகிறேன்.

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும் பொழுது அவர் செய்த தவறைக் கூட பொருட்படுத்துவது இல்லை. காணாத போது அவர் செய்த தவறுகள் மட்டுமே தெரிகின்றன.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

இழுத்துக் கொண்டு செல்லும் வெள்ளம் என அறிந்தும் நீரில் பாய்பவரைப் போல பயனில்லை என அறிந்தும் பிணங்குவது ஏன்?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

கள்வனே, கள் உண்டு களித்தவர் மீண்டும் கள்ளையே விரும்புதல் போல இழிவு வரும்படி துன்பம் தந்த போதும் விரும்புவர் உன் மார்பு.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

காமம் என்னும் உணர்வு மலரை விட மென்மையானது. சிலரே அதன் தன்மை அறிந்து துய்க்க நினைப்பவர்கள்.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

கண்ணில் வெறுப்பினைக் காட்டியவள் தன் நிலையை மறந்து புணர்தலில் என்னை விட விரைவாக இயன்றாள்.

துனிதல் - வெறுத்தல்
புல்லுதல் - புணர்தல்
விதுப்பு - விரைதல்

No comments: