Thursday, November 15, 2007

பொருட்பால் - ஒழிபியல் - மானம் - 97

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

இன்றி அமையாத சிறப்புகளைத் தரும் ஆயினும் தம் குடிபெருமை குறைக்கும் செயல்களை கைவிட வேண்டும்.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

புகழோடு கூடிய மானம் நிலைப்பதை விரும்புபவர்கள் தமக்குப் புகழ் வருமாயினும் தம் குடிப்பெருமை குன்றும் செயல்களைச் நெய்ய மாட்டார்கள்.

பேரான்மை - மானம்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

தம் வளம் பெரியதான பொழுது பணிவும், குன்றிய பொழுதில் மானத்தை உயர்வாகவும் கொள்ள வேண்டும்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

தம் நிலையில் இருந்து தவறி இழி செயல் புரிந்தவர்கள் தலையில் இருந்து உதிர்ந்த மயிருக்கு ஒப்பாவர்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

குன்று போல் நிலையான புகழ் உடையவர் ஆனாலும், தம் குடிப் பெருமை குன்றும் படி சிறிதளவு தவறு செய்தாலும் தம் நிலையில் குறைந்திடுவர்.

குன்று - சிறிய மலை
குன்றுதல் - குறைதல்
குன்றி அனைய - குன்றி மணி அளவு - நுண்ணிய அளவு

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

தம்மை இகழ்ந்தவர் பின் செல்லுதலால் ஒருவருக்கு புகழ் கிடைக்காது; கடவுளர் உலகமும் வாய்க்காது. பின் அத்தகைய செயலால் என்ன பயன்?

புத்தேள் நாடு - கடவுளர் உலகம்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

தம்முடன் ஒட்டாதவரிடம் சென்று அவர் அருளால் வாழும் நிலை ஒருவன் இறந்தான் என கூறத் தக்கது.

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

வலிமையான பெருங்குடிப் பிறந்தவர்கள் தம் நிலை அழிய உடல் காக்கும் வாழ்க்கை எதற்கு உதவும்?

பீடு - வலிமை

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

தன் மயிர் உதிர உயிர் நீக்கும் கவரிமான்; மானத்துக்கு இழுக்கு வந்தால் உயிர் துறப்பவரும் அத்தகையோரே.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

தமக்கு இழிவு வந்தால் உயிர் துறக்கும் மானம் உடையவரை இந்த உலகு வழிகாட்டியாகப் போற்றும்.

No comments: