Tuesday, November 13, 2007

பொருட்பால் - படையியல் - படைமாட்சி - 77

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

பகைக்கு அஞ்சாமல் வெற்றி பெறும் நால் வகை படைகளும் வேந்தன் பெறக்கூடிய செல்வங்களுள் எல்லாம் சிறந்தது.

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

சிறியதானாலும், போர்க்களத்தில் அழிவு வரும் நிலையிலும் விழுப்புண்களுக்கு அஞ்சாது வலிமையுடன் போரிடுவது நன்கு பயிற்சி பெற்ற பழம்படைக்கே உரியது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

எலி போன்ற வீரர்களால் நிறைந்த படை கடல் போல் ஆர்ப்பரித்தாலும் நாகம் மூச்செறிதல் போல் சிறந்த வீரர்களின் சீற்றத்துக்கு முன் வீழ்ந்து அழியும்.

உவரி - கடல்

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

அழிவின்றி, பகைவரின் வஞ்சத்துக்கு இரையாகாமல் படைநெறியில் தேர்ந்த வலிமை மிக்கதே படை.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

சாவு எதிர் வந்த போதும் கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல் நிறைந்தது படை.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

வீரமும், மானமும், முன்னோரின் சிறப்பான போர் நெறியில் செல்லுதல் மற்றும் மன்னனின் நம்பிக்கையைப் பெறுதலும் ஆகிய நான்கும் ஒரு படைக்கு காவலாகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

தன் மேல் வந்த போரை தாங்கும் தன்மை அறிந்து வெற்றி மாலை தாங்கி வருவது படை.

தானை - சேனை

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

போருக்கான வன்மமும், ஆற்றலும் இல்லையெனினும் சிறந்த அணிவகுப்பால் பெருமை பெறுவது படை.

அடல் - போர்க்குணம்

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

அளவில் சிறுத்திடல், நீங்காத வெறுப்பு, படைக்கான நிதிப் பற்றாக்குறை ஆகியவை இல்லை எனில் வெல்லக் கூடியது படை.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

நிலைத்துப் போரிடும் வீரர்கள் இருந்த போதிலும் வழி நடத்தும் தலைமை இல்லையெனில் படையால் நிலைத்திருக்க இயலாது.

No comments: