Sunday, November 11, 2007

பொருட்பால் -அங்கவியல் -சொல்வன்மை -65

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.


நாவினால் உளதாய நலமென்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலமானது, பிற நலங்கள் யாவற்றுள்ளும் சிறந்ததாகும்.


ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.


மேன்மையும் கெடுதலும் சொல்லினால் வருவதால், சொல்லும் சொல்லில் சோர்வு உண்டாகாதவாறு பேணிக் காக்க வேண்டும்.


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.


நட்பாய் ஏற்றுக் கொண்டவர்களைக் கவர்ந்து, அவர்கள் விரும்பிக் கேட்குமாறும், பகையாய் ஏற்றுக் கொள்ளாதவாறும் பகையை ஒழித்து நட்பை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே சொல்லாகும்.


திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.


கேட்பவரது மனநிலையை அறிந்து சொல்லப்படுவதை விட சிறந்த அறமும் பொருளும் இல்லை.


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.


தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடிய வேறொரு சொல் இல்லையென்றறிந்த பின்பே சொல்ல வேண்டும்.


வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.


பிறர் விரும்பும்படித் தாஞ்சொல்லி, பிறர் சொல்லும் சொல்லின் பயனை அறிந்து ஏற்றுக் கொள்வதும் இலக்கணத்தில் குற்றமற்றவரது கொள்கையாகும்.


சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.


சொல்வன்மை உடையவன், சொற்சோர்வற்றவன், அவைக்கஞ்சாத ஒருவனை மாறுபாட்டிலே வெல்வது யாவர்க்கும் அரியது.


விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.


கருத்தை நிரற்படக் கோர்த்து இனிய முறையில் சொல்லவல்லவர்கள் ஏவியதை இவ்வுலகம் விரைந்து கேட்கும்.

ஞாலம் -உலகம்


பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.


குற்றமற்ற சில சொற்களால் தம் கருத்தைக் கூற அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்ல எப்போதும் விரும்புவர்.


இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

தாம் கற்றவற்றைப் பிறரும் அறியும் வண்ணம் விளக்கிச் சொல்ல அறியாதவர், கொத்தாக மலர்ந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவராவர்.

இணர் -கொத்து
ஊழ்த்தும் -மலர்ந்திருந்தும்

No comments: