Friday, November 16, 2007

பொருட்பால் - ஒழிபியல் - சான்றாண்மை - 99

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

தமது கடமைகளை உணர்ந்த பெருந்தன்மையாளர்கள் நல்ல செயல்கள் எல்லாம் தம் கடமை எனக் கொள்வர்.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

சான்றோர் நலம் என்பது நல்ல குணங்களினால் ஆனவை. அதைத் தவிர பிற நலன்கள் எவ்வகை நலன்களாகவும் கருத இடம் இல்லை.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

அன்புடன் பழகுதல், பழிக்கு வெட்குதல், ஒற்றுமையாய் இருத்தல், பிற உயிர்களிடம் இரங்கும் தன்மை, வாய்மை ஆகிய ஐந்தும் மேன்மையின் தூண்களாகும்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

பிற உயிர்களை கொல்லாமை நோன்பு ஆகும்; பிறர் குறைகளை வேண்டுமென்று கூறாதிருத்தல் மேன்மை ஆகும்.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

செய்து முடிக்கக் கூடியவர்களால் பணிதல் என்னும் செயல் இயலும். அதை சான்றோர் மாற்றாரையும் நம் பக்கம் மாற்றும் கருவியாக பயன்படுத்துவர்.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

ஒப்புமை இல்லாதவர்களிடமும் தம் தோல்வியை ஏற்றுக் கொள்வது மேன்மையின் தன்மை அறிய உரைகல் ஆகும்.

துலையார் - தமக்கு ஒப்பில்லாதவர், தம்மிலும் தாழ்ந்தவர்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

தமக்கு தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய இயலவில்லை என்றால் மேன்மையால் என்ன பயன்?

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.

மேன்மை குணம் ஒருவருக்கு அமைந்து விட்டால் பொருள் இல்லாதிருத்தல் ஒருவருக்கு இழிவு இல்லை.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

உலகமே அழியும் ஊழி ஏற்பட்டாலும் தம் நிலையில் இருந்து வழுவாதவர் மேன்மையின் உறைவிடமாகத் திகழ்வர்.

ஊழி - உலகம் நீரில் அழிழ்தல்
ஆழி - கடல்

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

சான்றான்மை மிக்கவர் தன் பண்பில் இருந்து விலகினால் இந்த நிலத்தால் சுமையைத் தாங்க இயலாது.

No comments: