Monday, November 19, 2007

காமத்துப்பால் - கற்பியல் - புலவி - 131

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பிணங்கியதால் அவர் அடையும் துன்பத்தை சிறிது நேரம் காணலாம், ஆதலால் பிணங்கித் தழுவாதிரு.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

உணவிற்கு உப்பு போலவே பிணக்கமும். அது சிறிது நீண்டுவிட்டால் உணவில் உப்பு மிகுந்தது போலாகி விடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

தம்முடன் ஊடல் கொண்டவரை ஊடல் நீக்கித் தழுவாது விடல் ஏற்கெனவே துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவது போலாகும்.

அலந்தார் - அழிந்தவர்

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடிய மகளிரை உணர்ந்து பிணக்குத் தீர்க்காதிருப்பது வாடிய கொடி துளிர்க்க உதவாமல் அறுப்பது போலாகும்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

மலர் ஒத்த கண்ணினை உடைய மகளிர் ஊடலைத் தணிப்பதே பண்பு மிக்க காதலருக்கு அழகாகும்.

ஏர் - அழகு

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

நீண்ட பிணக்கும், ஊடலும் இல்லையெனில் காமம் முதிர்ந்த கனியும், இளம் பிஞ்சையும் போல நுகர இனிமையாய் இருக்காது.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

கூடி இருந்து பெறும் மகிழ்ச்சி நீடிக்குமோ, இல்லையோ என அஞ்சுவதால் ஊடலிலும் ஒரு துன்பம் இருக்கத்தான் செய்கிறது.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

தாம் தான் இவள் துன்பத்திற்கு காரணம் என்று உணராத காதலர் பொருட்டு நொந்து தான் என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

நிழலின் கீழ் உள்ள நீர் குளிர்ந்து இனிதாக இருக்கும். அதுபோலவே அன்புடையவரிடம் பிணங்குதல் இனிதாகும்.

வீழுநர் - அன்புடையவர்

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

ஊடலைத் தணிக்காமல் வாட விடுபவரிடம் கூடுவதற்கு என் நெஞ்சம் ஆசை கொள்கிறது.

உணங்க - வாட

No comments: