Friday, November 02, 2007

பொருட்பால் - அரசியல் - தெரிந்து - வினையாடல் - 52

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

ஒரு செயலினால் விளையும் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து நல்லனவற்றை செயல்படுத்தும் தன்மையுடையவனை செய்யப் பணிக்க வேண்டும்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வழிகளைப் பெருக்கி வளப்படுத்துவதற்கான தடைகளை அராயந்து களையக்கூடியவன் செயலில் ஈடுபட வேண்டும்.

உற்றவை - தடைகள்

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பு, அறிவு, அராய்ந்து தெளிதல், தன் ஆசைக்கு இடங்கொடாமை ஆகிய நான்கு குணங்களும் உடையவனைத் தேர்வு செய்ய வேண்டும்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

அனைத்து வகையிலும் ஆராய்ந்து பின் பணியில் ஈடுபடுத்தினாலும், பின்னரும் செய்யும் கடரையின் தன்மையால் மாறும் மனிதர் பலர்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

செயலை ஆராய்ந்து, இடை வரும் தடைகளை பொறுத்துக் கொண்டு செய்ய வல்லவனுக்கு கடமையைத் தர வேண்டுமே அல்லாது வேறு வழியில் சிறந்தவன் என்று தவறாக எண்ணி வேலையை தரக்கூடாது.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

ஒரு செயலின் தன்மை அறிந்து, செயலை செய்யக் கூடியவனை அறிந்து பின் செயல்படுத்தும் காலமறிந்து செய்ய வேண்டும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

ஒரு செயலை ஒருவன், இந்த வகையில் செய்வான் என்று ஆய்ந்து அச்செயலை அவனிடம் விட வேண்டும்.

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

செயலைச் செய்பவன் என்று அறிந்து ஒப்படைத்த பின், செயலுக்குரியவனாய் (பதவியில்) அமர்த்த வேண்டும்.

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

செயலிலே கண்ணும் கருத்துமாக இருப்பவனை நியமித்தவன் தவறாக நினைத்தால் செலவம் அவனை விட்டு நீங்கும்.

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

மன்னன் நாள் தோறும் தான் செயல் செய்யப் பணித்தவர்களின் செயல்பாட்டினை கண்காணித்து வரவேண்டும். ஏனெனில் நாடு கோணாமல் இருப்பது, அச்செயல்கள் சரிவர நடப்பதை பொறுத்தது.

No comments: