Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - கொடுங்கோன்மை - 56

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

தன் குடிமக்களை அலைக்கழித்து, துன்பம் விளைவிக்கும் வேந்தன் செயல் கொலையயை விட கொடுமையானது.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

தன் குடிமக்களிடம் முறையின்றி பொருள் வேண்டும் மன்னன், வேல் கொண்டு வரும் கொள்ளையர் போன்றவன்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

நாட்டில் உள்ள நிலையை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்காத மன்னன் நாடு சீர்குலைந்து அழியும்.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

அறம் பற்றி எண்ணாமல் ஆளும் மன்னன் தன் செல்வத்தையும், குடி மக்களின் அன்பையும் ஒருங்கே இழப்பான்.

சூழாது - எண்ணாது
கூழ் - செல்வம்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

துன்பத்தால், ஆற்ற இயலாத படி குடிமக்கள் விடும் கண்ணீர் பகைவரின் படை போல ஒரு மன்னனின் செல்வத்தை அழிக்கும்.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

செம்மையான ஆட்சியே மன்னனுக்கு நிலைத்த புகழைத் தரும். இல்லையெனில் மன்னருக்கு புகழ் நிலைக்காது.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

மழையில்லாத்தால் நேரும் துன்பம் போன்றதே, அன்பில்லாத மன்னன் நாட்டில் வாழும் நிலை.

எற்று - எவ்வாறு
அற்று - அவ்வாறு

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

முறையற்ற ஆட்சியில் வாழும் குடிமக்களுக்கு பொருள் இன்மையால் விளையும் துன்பம் நேரும்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

முறையற்ற செயல்களை மன்னன் செய்தால் வானம் பருவத்து பெய்யும் மழையைத் தராது.

உறை - பருவ மழை
ஒல்லாது - பொருந்தாது

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

காக்கும் கடமையை மன்னன் செய்யவில்லை என்றால் பசுக்களின் பயன் குன்றும், பல தொழில் செய்வோரும் கற்ற அறிவை மறப்பர். (நாட்டின் வளம் குன்றுவதால் பசுக்கள் தக்க உணவின்றி பால் தராது. பல தொழில் புரிவோரும் உணவு தேடி வேறு தொழில் செய்வதால் தம் தொழில் சார்ந்த அறிவினை இழப்பர்)

ஆ - பசு
அறுதொழிலோர் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈட்டல் முதலிய ஆறு தொழில்கள் செய்வோர்

No comments: