Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - கண்ணோட்டம் - 58

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

கண்ணோட்டம் (அன்பு, இரக்கம்) என்னும் சிறப்புடைய அழகு இருப்பதால் இந்த உலகம் இன்னும் இருக்கிறது.

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

இரங்குபவர்களால் ஆனது இந்த உலகம். இரக்கம் இல்லாதவர்கள் உண்மையில் நிலத்திற்கு சுமையே.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

பாடலுக்கு பண் இயைந்து வரவில்லை எனில் இசையால் பயன் இல்லை. அது போல் இரங்காதவருக்கு கண் இருந்து என்ன பயன்?

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

அளவோடு இரங்காதவருக்கு இருப்பது போல் தோன்றுவதைத் தவிர கண்ணால் ஆவது என்ன?

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

கண்ணிற்கு அணிகலன் போன்றதே கண்ணோட்டம்; கண்ணோட்டம் இல்லையெனில் கண்கள், புண்களாக கொள்ளப் படும்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

கண்ணோடு இயைந்த இரக்கம் இல்லாதவர்கள் மண்ணோடு அமைந்த மரத்திற்கு இணையாவர்.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

இரங்குதல் தன்மை இல்லாதவர் கண் உடையவர் இல்லை; கண் உடையவர் இரங்காமல் இருப்பதுமில்லை.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

தான் கொண்ட கடமை தவறாது இரங்குபவர் இவுலகுக்கு உரிமை படைத்தவர் ஆவார்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

தன்னை ஒறுத்தவரையும் இரக்கத்துடன் தவறைப் பொறுத்து இருப்பதே சிறந்தது.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

விரும்பத் தக்க நாகரிகம் வேண்டுபவர், தாம் விரும்புபவர் நஞ்சு தந்தாலும் அருந்துவர்.

No comments: