Monday, November 19, 2007

காமத்துப்பால் -கற்பியல் - நெஞ்சோடு புலத்தல் -130

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

அவருடைய நெஞ்சு (நம்மை நினையாமல்) அவருக்கு உகந்ததாக இருக்கும் போது, நீ மட்டும் எனக்காக இல்லாமல் அவரை நினைத்திருப்பது ஏன்?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

நம்மை விரும்பாதவர் என்று அறிந்தும், அங்கே சென்றால் சினம் கொள்ள மாட்டார் என அவரிடம் செல்கிறாயே, நேஞ்சே!

உறாதவர் - விரும்பாதவர்
செறு - சினம்
சேறி - போகிறாய்


கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

என்னைப் போல் துன்பத்தில் கெட்டவருக்கு நட்புடையவர் இல்லை என்பதால் தான் அவரிடம் விரும்பிச் செல்கிறாயே, நெஞ்சே.

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே, முதலில் பிணங்கி பின் இணங்குவோம் என்று சொன்னாலும் நீ கேட்பதில்லை. ஆதலால் இனி யார் அவ்வாறு உன்னுடன் பேசுவார்கள்? (நான் மாட்டேன்!)

சூழ்வார் - கலந்து பேசுபவர்
துனி - வெறுத்து
துவ்வாய் - துய்க்க மாட்டாய்


பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

தலைவன் இல்லை என்பதற்காக துன்பத்திற்கு அஞ்சும்; இருந்தாலோ பிரிவாரே என துன்பத்திற்கு அஞ்சும். இவ்வாறு நீங்காத துன்பத்தைத் தரும் என் நெஞ்சு.

உறா - நீங்காத

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

தனிமையில் இருந்த போது அவரை நினைத்தால், என்னைத் தின்பது போல் இருந்து துன்புறுத்தும் என் நெஞ்சு.

தினிய - தின்பது

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

அவரை மறக்க இயலாமல் என் பெண்மையின் மாண்பை இழந்த மனத்தோடு சேர்ந்து என் நாணத்தையும் மறந்தேன்.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

அவரை இகழ்வது நமக்கே இழிவு என்ற எண்ணி அவருடைய பெருமையையே நினைத்துக் கொண்டிருக்கிறது உயிரனைய காதல் நெஞ்சம்.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

பிரிவின் துன்பத்தில் என்னை விட்டு அவரிடம் என் நெஞ்சே சென்ற பிறகு எனக்கு யார் தான் துணை?

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

நம்முடைய நெஞ்சமே நமக்கு உறவாக இல்லாத போது பிறர் நம்மவராக இல்லாதிருப்பது எளிதானதே!

தஞ்சம் - எளிது
ஏதிலார் - அந்நியர்

No comments: