Tuesday, November 13, 2007

பொருட்பால் - நட்பியல் - நட்பு - 79

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

நட்பு போல் சிறந்த பொருள் வேறு இல்லை. அந்நட்பு நாம் செய்து கொள்ளக் கூடிய காவல்களில் சிறந்தது.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

அறிவுடையவர் நட்பு பிறை போல் நாளும் வளரும் தன்மை உடையது. அறிவிலார் நட்பு நிறைந்த மதி பின் தேய்தல் போன்றது.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

அன்றாடம் நூல் கற்பது போல் பண்புடையாளரின் தொடர்பும் இன்பம் தரும்.

நவில் - கற்றல்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

நட்பு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று. அளவு மீறிச் செயல்படும் பொழுது இடித்துக் கூறுவதற்காகவும் தான்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

நட்பிற்கு அருகிருந்து பழக வேண்டும் என்பது இல்லை; ஒத்த உணர்வே நட்பின் உரிமையைத் தர வல்லது.

கிழமை - உரிமை

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

முகத்தில் மகிழ்வு காட்டிப் பழகுவது நட்பு இல்லை. மனதால் மகிழ்ந்து பழகுவதே நட்பு.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

தவறான வழியில் வரும் அழிவிலிருந்து காத்து, நல் வழியில் நடத்தி மீறி வரும் துன்பத்தைத் தானும் துய்பது நட்பு.

அவை - உலக நடைமுறைக்கு மாறாக, தீய வழி
உழப்பது - படுவது, துய்ப்பது

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

ஆடை நழுவும் போது தாமதிக்காமல் அனிச்சையாக விரையும் கை போல துன்பம் வரும் போது விரைந்து உதவுவது நட்பு.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

மன வேறுபாடு இல்லாமல் இயன்ற பொழுதெல்லாம் தாங்குவதே நட்பின் அடையாளம்.

கொட்பு - வேறுபாடுஒல் - எல்லை,
ஒல்லும் வாய் - எல்லை வரை, இயன்ற வரை

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

தனக்கும் நன்பனுக்கும் உள்ள உறவைச் சிறப்பித்துக் கூறினாலும் நட்பு சிறப்பு குன்றும்.

No comments: