Sunday, November 18, 2007

காமத்துப்பால்- கற்பியல் - பசப்புறு பருவரல்-119

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

விரும்பிய தலைவனை பிரிவை விரும்பி நேர்ந்ததால் ஆட்பட்ட பசப்பை அடைந்த என்னியல்பை எவ்வாறு யாருக்கு உரைப்பேன்

--என் காதலவர் என்னை விட்டு பிரிந்து செல்ல அனுமதித்துவிட்டேன். ஆனால், அவர் பிரிவினால் என் உடலில் படர்ந்த பசலையின் தன்மையினை எவ்வாறு பிறரிடம் சென்று உரைப்பேன்??
பண்பியார்க்கு - பண்பு யார்க்கு - குற்றியலிகரம்


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

தலைவன் கொடுத்ததால் வந்தேன் என்னும் பெருமையால் இந்த பசப்பு நோயானது என் உடலின் மேல் தொடந்து ஊரும்.

-- என் காதலர் உண்டாக்கினார் என்ற பெருமையினால், இந்த பசலையானது என் மேனி மேல் எங்கும் ஊர்ந்து பரவுகின்றது.
தகை - பெருமை
மேனி - உடல்
ஊரும் - பரவும்


சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

என் மேனி அழகயும் நாணத்தையும் எடுத்துக்கொண்டு மாறாக(பிரிவின்போது) இந்தக்காமநோயான பசலை நோயைக்கொடுத்துவிட்டார்

-- என் மேனியழகையும், உள்ளத்தின் நாணத்தையும் அவர் எடுத்துக் கொண்டு, அதற்கு மாற்றாக, பிரிவுத்துன்பத்தையும், பசலை நோயையும் தந்துவிட்டார்.

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

அவனையே நினைக்கின்றேன், அவனுடைய நல்ல திறன்களையே பேசுகின்றேன் அவ்வாறு செய்யாமல் நிற்கவும் உடனே பசலை வந்து நிற்கின்றது. இது என்ன வஞ்சனையோ?

-- உள்ளத்தால் அவரை நினைக்கிறேன், என் வாய்ச்சொற்களும் அவருடைய வலிமையையும், நல்லியல்பு திறத்தையும் பற்றியேதான் பேசுகிறேன். மனதாலும், சொற்களாலும் அவரைவிட்டுப் பிரியாதிருந்தும், என் மேனியில் இந்த பசப்பு எப்படித்தான் கள்ளத்தனமாய் வந்ததோ?

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

அங்கே அக்காலத்தை பிரிந்து செல்வது என் தலைவன் பசலை நோயோ இங்கேயன்றோ என் உடலில் அன்றோ ஊர்கின்றது.

--என் காதலர் நெடுந்தொலைவு கூட செல்லவில்லை. உப்பக்கம்(உங்கு) சென்றாலே, இப்பக்கம் (இங்கு) என் மேனியில் பசலை வந்துவிடுகிறது.
உவக்காண் - உங்கு, உவ்விடம் (நெடுந்தொலைவிலும் இல்லாமல், மிக அருகிலும் இல்லாமல் இடைப்பட்ட தொலைவு; கூப்பிடுந்தூரம் ன்னும் சொல்லலாம்)

இவக்காண் - இங்கு


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கினது சோர்வைப்பார்த்து நெருங்கி வரும் இருளைப்போல தலைவனது புணர்ச்சியின் சோர்வைப்பார்த்து பசலை நோயானது நெருங்கி வரும்
கொண்கன்- தலைவன்

-- விளக்கினது ஒளி தீர்ந்ததைப் பார்த்து படர்ந்திடும் இருளினைப்போல், தலைவனுடைய தழுவல் அகன்றவுடனேயே படர்கின்றது இப்பசலையும்.
அற்றம் - முடிவு


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

முன்னொரு நாள் காதலனை தழுவிக்கிடந்தேன் அறியாது சற்று விலகிவிட்டேன் அவ்விலகிய வளவிலே பசலைநிறமானது அள்ளிக்கொள்ளப்படும் பொருள் போலே வந்து நிறைந்தது.

-- முந்தைய பாடலில், தலைவனின் தழுவல் கலைந்த உடன் பசலை வந்துவிடுகிறது ன்னு அந்த அம்மா சொன்னாங்கள் ல. இந்த பாட்டுல அத அப்படியே கொஞ்சம் விளக்கமா சொல்றாங்க. ஒன்னுமில்ல,

இருவரும் அணைத்தபடி உறங்கிக்கொண்டிருக்கையில், தூக்கத்துல கொஞ்சம் ஒரு பக்கம் புரண்டு படுத்துருக்காங்க. அவ்வளவுதான். அப்படியே இந்த அம்மாவையே தூக்கி சாப்பிடற அளவுக்கு பசலை அவங்க மேனி முழுதும் பரவிடுச்சாம்.
புல் - புணர்வு
புல்கு - தழுவு
புடை - இடம்; புடைபெயர்ந்தேன் - இடம் பெயர்ந்தேன்


பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

இவள் பசலைநிறத்தை அடைந்தால் என்று என்னை பழிப்பார் உள்ளார் இவளை அவர் துறந்தார் என்று சொல்லுவாரில்லை

-- 'அய்யோ பாவம்! இந்த பெண்ணுக்கு பசலை வந்துவிட்டதே' என்று என்னைத் தான் எல்லோரும் பழிக்கிறார்களே அன்றி. பிரிவைப் பொறுக்க இயலாத இந்தப் பெண்ணைப் போய், அவர் பிரிந்துவிட்டாரே என்று உரைப்பவர்
எவரும் இல்லையே.

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

நானை உடன்படும் வகையில் பிரிவைச்சொல்லிய தலைவன் இன்று தன் கருத்தால் நல்ல நிலையை அடைந்திருதந்தால்(அதாவது உண்மையைச்சொல்லி பிரிந்திருப்பாராயின் அவன் நல்ல நிலையை அடைந்திருப்பான்) அவ்வாறாயின்
இந்த உடலானது பசலை நோயின்பாற் படட்டும்

-- தலைவனின் பிரிவுக்கு என்னை சம்மதிக்க வைத்து (உடன்படுத்திச்) சென்றவர், சென்ற இடத்தில் நலமாக இருப்பார் என்றால், என் மேனி பசலையால் வேதனைப்பட்டாலும் படட்டும்.
(பசக்கமன் பட்டாங்கு என் மேனி - என் மேனி பசலையின் பால் படட்டும்)

நயப்பித்தார் - உடன்படுத்தியவர்

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

அன்று என்னை கொண்ட தலைவனை நாட்டோர் குறைகூறாமல் என்னை பசலை கொண்டவள் என்று கூறிடினும் நன்றே

-- நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின், பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே.

No comments: