Sunday, November 18, 2007

காமத்துப்பால்-கற்பியல்-பொழுது கண்டிரங்கல்-123

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

மாலைப்பொழுதே நீ வாழி! நீ முன்பு வரும் மாலைக்காலமில்லை மணந்த மகளிரின் உயிரை உண்ணும் வேளையாயிருக்கிறாய்

-- மாலைப் பொழுதே நீ வாழ்வாயாக! தலைவனுடன் கூடியிருந்த காலத்தில் இருந்தது போல், இன்பமூட்டும் இனிய மாலைப்பொழுதாக அல்லாமல், கணவனைப் பிரிந்து தவிக்கும் மகளிரின் உயிரை உண்ணும் பொழுதாய் இருக்கின்றாய்.

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

மாலைப்பொழுதே நீ வாழி. உன் துணையும் என் துணைபோல் வன்மனத்தானோ? அதனாலே நீயும் என்னைப்போல் வருந்தி ஒளியிழந்து நிற்கின்றாய்.

-- மயங்கும் மாலைப் பொழுதே நீ வாழ்க! நீயும் ஏன், என்னைப் போல் ஒளி குன்றுகிறாய்? உன் துணையும், என் கணவரைப் போல் கல் மனங்கொண்டதோ??
புன்கண் - பொலிவு இழத்தல், ஒளி மங்குதல்
மருள் - மயங்குதல்


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பனியரும்பி பசந்து வந்த மாலை முன்போலில்லாமல் உயிர்வாழ்தலில் வெறுப்புண்டாகும் வண்ணம் துன்பம் வளர தினமும் வருகின்றது.

-- மாலைப் பொழுதில், மார்கழி மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும். அந்த பனிப்பொழிவானது, தலைவனைப் பிரிந்த தலைவியின் மேனியில் படர்கின்ற பசலையினைப் போல் இருக்கும். (மேனியில் வெளிரிய நிறம் தோன்றுதல் - பசலை)

பனி அரும்பி - கதிரவனின் ஒளிக் கற்றை மறைய மறைய, பனித்துளியானது மெல்ல மெல்ல அரும்பி
பைதல் கொள் மாலை - இதமான குளிரினை உடைய மாலைப் பொழுது (பைதல் - குளிர்)
துனி அரும்பி - உயிர் வாழ்தலின் மேல் வெறுப்பினை உருவாக்கும் வண்ணம் (துனி - வெறுப்பு)
துன்பம் வளர வரும் - பிரிவுத் துன்பத்தை மேன்மேலும் வளர்ப்பதற்காக வருகிறது.


முன்பெல்லாம், பனிப்பொழிவினால் பசந்து இன்ப உணர்வு பொங்கும்
வண்ணம், சில்லென்னும் குளிர்ந்த காற்றுடன் மாலைப் பொழுது வந்தது. ஆனால், இப்பொழுதோ தலைவனைப் பிரிந்து தவிக்கும் எனக்கு, துன்ப நோயை மேன்மேலும் வளர்த்து, உயிர் வாழ்தலின் மேல் வெறுப்பினை உண்டாக்கும் வண்ணம் நிதமும் வருகின்றது.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

தலைவன் உள்ளவிடத்து என்னுயிர் தளிர்க்க வந்த மாலை அவரில்லாத பொழுது கொலைக்களத்துக்கு வரும் கொலைஞன் போல் வருகின்றது.

-- என் தலைவனைப் பிரிந்திருக்கின்ற நாட்களில், மாலைப்பொழுதானது, கொலைக்களத்திற்கு வரும் கொலைஞனைப் போல் வருகிறது.
ஏதிலர் - பகைவர், அன்பற்றவர், கொலைஞர்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?

(என்னை வருத்தாது விட்டுவிடும்) காலைக்குச் செய்த நன்மை யாது (என்னை வருத்தும்)மாலைக்குச்செய்த பகைதான் என்ன?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்று, என் தலைவர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த காலை (காலத்தில்) நான் அறியவே இல்லை.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

காலையில் அரும்பாகி, பகலெல்லாம் பெரிய அரும்பாகி, முதிர்ந்து, மாலையில் மலரும் இந்த நோய்.

-- காலை வேளையில் மொட்டுவிட்டு, பகல் முழுதும் வளர்ந்து போது ஆகி(முதிர்ந்த மொட்டாகி), மாலையில் மலர்கின்றது இந்த காதல் நோய்.
போது - மலரும் தருவாயில் உள்ள அரும்பு

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

முன்னர் இனிமையாயிருந்த ஆயனின் குழலிசை, இப்பொழுதெல்லாம், நெருப்புப் போலச் சுட்டெரிக்கும் மாலைப்பொழுதை வருவிக்க வேண்டித் தூதாக செல்வதால், அது என்னைக் கொல்லும் படைக்கலமுமாயிற்று.

அழல் -நெருப்பு

-- தீயாய் என்னைச் சுட்டெரிக்கின்ற மாலைப் பொழுதினை வரவேற்கும் தூதாக ஆயனின் குழலோசை இருப்பதால், அவ்வோசையானது, என்னைக் கொல்லவரும் படைக்கலத்தின் ஓசைபோல் வந்து என்னை அச்சுறுத்துகிறது.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

மதிமருளும் வகை மாலை படரும் பொழுது இவ்வூரெல்லாம் மயங்கி நோயை அனுபவிக்கும்

பைதல் - நோய்

--மாலை பொழுது வந்தால், என் அறிவு மயங்கி, எனக்குப் பிரிவுத் துனபத்தை தந்து வருத்துகின்றது, அவ்வேளையில் இந்த ஊரும் மயங்கி துன்பத்தில் உழல்வது போலவே தோன்றுகிறது.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

இத்தனை காலமும் பிரிவைப்பொறுத்து இறவாதிருந்த என்னுயிர் பொருளியல்பே தன்இயல்பா கொண்ட காதலனை நினைத்து இந்த கொடுமையான மாலை வேளையில் மாய்கின்றது.

-- பொருள்மாலையாளரை உள்ளி - பொருளீட்டுவதற்காகச் சென்ற என் காதலரை நினைத்து,
-- மருள்மாலை மாயும் என் உயிர் - மயங்கும் இந்த மாலை வேளையில் மாய்ந்து போகின்றது.
-- மாயா உயிர்-
அவர் பிரிந்து சென்ற வேளையில் மாய்ந்து போகாது நின்ற என் உயிர்.

பொருளீட்டுவதற்காக என் காதலன் செல்லும் வேளையில் மாய்ந்து போகாமல் நின்ற என் உயிரானது, அவர் சென்ற பின் அவரையே நினைத்து, மயங்கும் மாலை வேளையில் பிரிவுத் துன்பத்தால் மாய்கின்றது.

No comments: