Tuesday, November 13, 2007

பொருட்பால் - படையியல் - படைச் செருக்கு - 78

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

பகைவரே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்கள். அவனை எதிர்த்து வீழ்ந்து நடு கல்லாய் நின்றவர் பலர்.

ஐ - தலைவன்என்னை - என் + ஐ
தெவ்விர் - பகைவர்

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

காட்டில் முயலை அம்பெய்து வீழ்த்துவதை விட களத்தில் யானை மேல் எய்த வேல் குறி தவறுதல் படை வீரருக்கு சிறப்பே.

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

களத்தில் அஞ்சாத வீரம் ஒருவனுக்கு மிகப்பெரிய வீரம். பகைவருக்கு ஒரு துன்பம் வரும் போது பரந்த மனப்பான்மையோடு உதவுவது அதனினும் சிறந்தது.

எஃகு - கூர்மை, நுண்ணிய, சிறப்பு

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

போர்களத்தில் யானை மேல் தன் கைவேலை எறிந்தவன் தன் மார்பில் பாய்ந்த வேலைக் கண்டு துன்பத்திற்கு பதிலாக போரிட வேல் கிடைத்ததாக எண்ணி மகிழ்வான்.

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

பகைவரை எதிர்நோக்கிய கண்கள் அவர் வேலெறியும் போது அதனால் கண் இமைத்தால் கூட வீரருக்கு அற்பமான செயலே ஆகும்.

ஒட்டு - அற்பம்

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

தான் வாழ்ந்த நாள்களில் விழுப்புண் படாத நாளெல்லாம் வீண் என்று ஒதுக்கி விடுவான் வீரன்.

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

மாபெரும் வீரன் என்ற புகழை விரும்பி உயிரையும் விட துணியும் வீரருக்கு காலில் அணியும் கழல் அழகு சேர்க்கும்.

யாப்பு - கட்டுதல், அணிதல்
காரிகை - அழகு

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

போர்களத்தில் தம் உயிரையம் அஞ்சாத மறவர் தலைவன் சினந்தாலும் (தடுத்தாலும்) தம் ஊக்கம் குன்றுவது இல்லை.

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

தன் சூளுரைத்தது நிறைவேற்றுதற் பொருட்டு களத்தில் உயிர் துறந்தவரை, அச்சூழளுரை நிறைவேறாததற்காக யார் ஒறுக்க முடியும்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

களத்தில் தான் இறந்தமைக்காக தலைவன் கண்ணீர் வர வருந்துவான் என்றால் அத்தகைய சாவை இரந்தாவது பெறல் வேண்டும்.

No comments: