Sunday, November 18, 2007

காமத்துப்பால் -கற்பியல் -படர்மெலிந்து இரங்கல் -117

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

என் மனதிற்குள்ளேயே மறைக்க முற்படும் பொழுதெல்லாம், பிரிவுத்துன்பமான இக்கொடிய நோயானது, இறைக்கும் பொழுதெல்லாம் பெருகும் ஊற்றுநீரினைப் போல்பெருகுகின்றது.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

காதல் நோயை என்னால் மறைக்கவும் இயலவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்பவும் என் பெண்மை நாணுகிறதே!
கரத்தல் - மறைத்தல்

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

பிரிவுத் துயரை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் துன்புறும் என் உடலினுள்ளே, காமமும், நாணமும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, அதன் இருதலையிலும் சம எடையாகத் தொங்குகின்றனவே!
காவா -காவடித் தண்டு
தூங்கும் - தொங்கும்


காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

காமமாகிய நோயானது, கடலைப் போல் பெருகியுள்ளது; ஆனால், அதைக் கடப்பதற்குப் பாதுகாப்பான தோணியாகிய காதலர்தாம் என்னுடன் இல்லாமர் போயினார்.

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

இன்பஞ்செய்யும் எம் காதலினிடத்தே பகைவரைப் போல் துன்பம் செய்யவல்ல என் காதலர், துன்பஞ்செய்தற்குரிய பகைமையிடத்து என்ன செய்வாரோ?
துப்பு -துன்பஞ்செய்தற்குரிய பகைமை

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

காதல், இன்பம் அநுபவிக்கும் போது கடலளவுள்ளது; அது தரும் பிரிவுத் துன்பமோ கடலை விடப் பெரிதாயுள்ளது.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

காமமாகிய கடலை நீந்தி கரை காணாமல் தவிக்கிறேன்; நள்ளிரவிலும் நான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

பாவம் இந்த இரவுப் பொழுது! உலக உயிர்கள் அனைத்தையும் தூங்கச் செய்துவிட்டு தனிமையில் இருக்கின்றது. அதற்கு என்னையன்றி வேறு துணை இல்லை.


கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

அவர் பிரிவைப் பொறுக்க இயலாத இந்நாள்களில் இரவுப் பொழுது கழிவதற்கு நெடுநேரமாவது,அக்கொடியவரது கொடுமைக்குமேல் கொடுமையானதாக இருக்கின்றது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

என் மனதைப் போன்று என் உடலும் அவர் இருக்கும் இடத்திற்கு இப்பொழுதே விரைந்து செல்லவல்லனவாயின், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

No comments: