Wednesday, November 14, 2007

பொருட்பால் - நட்பியல் - பேதைமை - 84

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

துன்பத்தை விரும்பி ஏற்று நன்மையை தன்னை விட்டு போக விடுவது பேதமை எனப்படும்.

பேதமை -அறிவிலி

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

தனக்கு கை வராத செயல்களை செய்ய ஆசைப்படுதல் பேதமை அனைத்திலும் பேதமையாக கருதப் படும்.

காதன்மை - ஆசை

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

பிறர் பழிக்கும் செயல்களுக்கு வெட்கப்டாதிருப்பது, புகழுக்குரிய செயல்களில் நாட்டமில்லாமை, பிறரிடத்து அன்பில்லாமை, பேண வேண்டிய நற்குணங்களைப் பேணாமை அறிவில்லாதவர்கள் கடமையாகச் செய்வார்கள்.

நார் - அன்பு

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

நூல்களைப் படித்தும், அதன் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும் அதன் படி நடவாமல் திரியும் பேதைகளை விட பேதையர் வேறு இலர்.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

பேதை தான் ஏழு பிறப்பும் நரகம் புகுந்து அழுந்து வகையில் தவறுகளை வரு பிறப்பிலேயே செய்து விடுவான்.

அளறு - நரகம்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

தனக்கு கை வராத செயல்களை, பேதை மேற்கொண்டால் அச்செயலும் கெடுவதோடு, தமக்கும் தளை ஏற்படுத்திக் கொள்வர்.

புனை - கால் விலங்கு, தளை

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

பேதையின் கையில் பெருஞ்செல்வம் கிடைத்தால் அன்னியர் அதன் பயனைப் பெற சுற்றத்தார் பசியால் வாடும்படி நடந்து கொள்வான்.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

தன் கையில் பொருள் கிடைத்தால் பித்தன் கள் குடித்தது களிப்புற்றது போல் நடந்து கொள்வான்.

மையல் - மனநிலை தவறியவன், பித்தன்

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

இரு பேதைகள் கொள்ளும் நட்பு பிரிவில் துன்பம் தருவது இல்லை ஆதலால் பெரிதும் இனிதே.

பீழை - துன்பம்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

சான்றோர் குழுவில் பேதை நுழைவது கழுவாத காலை படுக்கையில் வைப்பதைப் போன்றது.

கழாஅக்கால் - கழுவாத கால்
பள்ளி - படுக்கை

No comments: