Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - ஊக்கமுடைமை - 60

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

ஊக்கம் உடையவர் அனைத்தும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் எவை உடையவரானாலும் இல்லாதவரே.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

ஊக்கம் உடைமையே நிலையான உடைமை ஆகும். பொருள் உடைமை நீங்கும் தன்மை உடையது.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

உறுதியான ஊக்கத்தை தம் கைப்பொருளாகக் கொண்டவர், தம் செல்வத்தை இழந்தோம் என்று கவலை கொள்ள மாட்டார்கள்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

அசையாத ஊக்கத்தை உடையவனிடத்திற்கு செல்வம் வழி கேட்டுச் செல்லும்.

அதர் - வழி

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

நீரின் ஆழத்திற்கேற்ப மலர் தாளின் உயரம் அமையும், மாந்தருக்கு உள்ளத்து ஊக்கத்தால் உயர்வு அமையும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

உயர்வான சிந்தனையையே எண்ண வேண்டும். அவ்வெண்ணம் கை கூடவில்லை எனினும் நீங்காத தன்மை உடையது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

அம்பினால் புண் பட்டாலும் உறுதி குன்றாமல் யானை தன் புகழை நிலை நிறுத்துவது போல் தம் எண்ணத்திற்கு சிதைவு வந்தாலும் ஊக்கம் உடையவர் தளராமல் இருப்பர்.

ஒல்கார் - தளராதவர்
உரவோர் - ஊக்கமுடையோர்

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

ஊக்கம் இல்லாதவர் தாம் வலிமையுடையவர் என்னும் நம்பிக்கை அமையதவராய் இருப்பார்.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

உடலால் பெரியது, கூரிய கொம்புகளை உடையது ஆனாலும் யானை புலியால் தாக்கப்ப்பட்டால் வெருளும்.

பரியது - பெரியது
கோட்டு - கொம்பு
வெரூஉம் - வெருளும்


உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

ஊக்கம் மிகுந்திருத்தலே ஒருவருக்கு உறுதியைத் தரும். ஊக்கம் இல்லாதவர் மனித உருவில் இருக்கும் மரங்களாவர்.

வெறுக்கை - மிகுதி

No comments: