Sunday, November 18, 2007

காமத்துப்பால் -கற்பியல் -பிரிவாற்றாமை -116

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

'நான் உன்னை விட்டு நீங்கிப் போவதில்லை' என்று சொல்வதானால், அச்செய்தியை என்னிடத்தே சொல். அவ்வாறன்றி, 'விரைந்து வந்துவிடுவேன்' என்று சொல்வதானால், அச்செய்தியை நீ வரும்வரை உயிருடன் இருக்க வல்லவரிடத்தே சென்று உரைப்பாயாக.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புண்கண் உடைத்தாற் புணர்வு.

அவர் அன்பான பார்வைமாத்திரம் கூட முன்னர் இனிதாயிருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவருடன் புணர்தலும் துன்பமாகத் தோன்றுகிறது.
பார்வல் -பார்வை

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

'பிரியேனென்ற தன் சொல்லையும், நம் பிரிவைப் பொறுக்க இயலாதத் தன்மையையும்' அறிந்த காதலரிடத்தும், ஒரு சமயத்தில் பிரிவு உள்ளதால், அவர், 'பிரியேன்' என்று சொன்ன சொல்லை என்னால் நம்ப இயலவில்லை.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

பார்த்த முதல் நாளே, 'உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சாதே', என்று உறுதிபடக் கூறியவர், பின் பிரிவாராயின், அவர் சொல்லை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

என்னுயிரைச் செல்லாமல் காப்பாற்றுவதானால், அதனை ஆளுவதற்கு அமைந்தவரது பிரிவைத் தடுத்துக் காப்பாற்றுவாயாக; அவர் பிரிந்து போய்விட்டால் அவரால் ஆளப்பட்ட உயிரும் போய்விடுமாதலால், பின் அவரைக் கூடுதல் அரிதாகும்.
ஓம்பு -காப்பாற்று

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

தலைவர் தாமே என் முன்னின்று, தம் பிரிவைப் பற்றி அறிவிக்கும் அளவினுக்குக் கொடியவராயின், அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் ஆசையும், பயன் இல்லாததே!
நசை -ஆசை

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை.

என்னைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, அவன் அறிவிக்காமலே, என் மெலிந்த முன்கையினின்று கழலும் வளையல்களே ஊரார்க்கு அறிவித்துவிடும்.
துறைவன் -தலைவன்
தூற்றாகொல் -அறிவியாவோ
இறவா -கழலா நின்ற

இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.

(இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு)
தன்குறிப்பறிகிற தோழியரும், நம்மேல் அன்புடைய உறவினருமில்லாத ஊரினிடத்து வாழ்தல், துன்பஞ்செய்வதாகும்;
அதனினும் துன்பமானது தன் காதலரைப் பிரிவதாகும்.
இனன் -தோழியர்

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

தீயானது தன்னைத் தொட்டால் சுடும்; ஆனால் அது, காமநோயைப் போல ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்கும் வேளையில் சுடும் ஆற்றலற்றது ஆகும்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

காதலர் பிரிவை அறிவித்த போது அதற்கு உடன்பட்டும், பிரியும் போது உண்டாகிற துன்ப நோயையும் பொறுத்துக் கொண்டு, அவரது பிரிவுத் துயரையும் தாங்கி, அதன்பின்னும், காத்திருந்து உயிர் வாழும் மகளிர் இவ்வுலகில் பலர் இருக்கலாம். ஆனால் என்னால் ??

No comments: