Sunday, November 18, 2007

காமத்துப்பால் -களவியல் -அலர் அறிவுறுத்தல் -115

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

மடந்தையோடு எமக்கு உண்டான காதலால், ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்பது, என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறியமாட்டார்கள்.

அலர் - பழிச்சொல்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

மலர் போன்ற கண்களை உடைய இப்பெண்ணின் அருமையை அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, பழிக்கூறலை எமக்களித்தார்களே!

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

எங்கள் காதலை இவ்வூர் அறிதலால் விளைந்த அலரானது, அவனையும் சென்று சேருமாதலால், அதனைப் பெறாததைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன். (அந்த அலர்தான் எம்மை எம் காதலனுடன் சேர்விக்கப்போகின்றபடியால், அது எனக்கு பெறாது பெற்ற பொருளைப் போன்றது )
கௌவை - பழிச்சொல், அலர்

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

ஊர் உரைக்கும் பழிச்சொற்களாலே என் காதல் மென்மேலும் மலர்கின்றது! அவ்வலர் இல்லையானால், அது தன் இன்பந்தரும் தன்மையிழந்து சுருங்கிப் போய்விடும்.

கவ்வை -பழிச்சொற்கள்

தவ்வென்னும் -சுருங்கிப்போகும்

களித்தோறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.

கள்ளுண்பவர்கள் கள்ளுண்ணும் பொழுதெல்லாம் அதனை மென்மேலும் விரும்பினாற் போல், காதலும் அலரால் வெளிப்படுந்தோறும் மிகுந்த இனிதாகின்றது.
களித்தல் - மகிழ்தல், கள்ளுண்ணுதல்
வேட்டல் - விரும்புதல்


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

தலைவனை நான் கண்டது ஒரேஒரு நாள்தான்; ஆனால் அதனால் உண்டான அலரானது, சந்திரனைப் பாம்பு விழுங்குவது உலகெங்கும் பரவுதற்போல் பரவிவிட்டது.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்.

இக்காதல் நோயானது, ஊராரின் பழிச்சொற்களை எருவாகவும், அவைகளைக் கேட்டு, தாய் சொல்லுகின்ற கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

'பழிச்சொற்களால் காமத்தைத் தணித்துவிடுலாம்' என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அணைப்பதை ஒத்ததாகும்.

நுதுப்பல் - தணித்தல்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.

பலரும் நாணும் வண்ணம், 'அஞ்சாதே! உன்னை விட்டு பிரியமாட்டேன்!' என்று என்னைத் தெளிவித்துத் தேற்றியவர், என்னை விட்டு நீங்கியபின், ஊராரின் அலருக்கு என்னால் நாணவும் இயலுமோ?

ஒல்வது ~ ஒல்லுதல் - இயலுதல்

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை யெடுக்கும் இவ்வூர்.

யாம் வேண்டும் கவ்வை எடுக்கும் இவ்வூர், (தலைவர்) தாம் வேண்டின் நல்குவார்

நான், என் காதலருடன் உடன்போவதற்கு விரும்புவதாகிய அலரினை இவ்வூராரும் எடுத்துக் கூறுகின்றனர் (என் உள்ளத்தின் உவப்பையே, ஊராரும் அலராகப் பேசுகின்றனர்); என் தலைவனும் என்னை விரும்புவரானால், அவரும் அதற்கு உடன்படுவார். ஆதலால் இவ்வலர் எமக்கு நன்றாய் அமைந்தது.

2 comments:

Winyoga said...

விள‌க்கவுரை சிற‌ப்பாக‌ உள்ள‌து. மிக்க‌ ந‌ன்றி.

தமிழ் said...

இன்னும் படித்து பாருங்கள்! எவ்வகையான கருத்தாக இருந்தாலும், தெரியப்படுத்துங்கள்!

வருகைக்கு நன்றி!