Monday, November 19, 2007

காமத்துப்பால் - கற்பியல் - நிறையழிதல் - 126

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காமம் என்னும் உளி, நாணம் என்னும் தாழ் அடைத்த நிறை என்னும் கதவை உடைத்து விடும்.

கணிச்சி - உளி

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

காமம் இரக்கமே இல்லாதது. இரவான போதும் விலகாது இருந்து என் நெஞ்சை ஆட்டுவிக்கிறது.

யாமம் - இரவு

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

தம்மை அறியாமல் வெளிப்படும் தும்மல் போல் வெளிப்படும் காமத்தை நான் எவ்வாறு மறைப்பேன்?

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

நான் நிறையுடையவள் என்று கருதுவேன். ஆனால் காமமோ என்னையும் மீறி பொதுவில் வெளிப்பட்டு விடுகிறது.

மன்று - பொதுவில்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

ஊடலால் என்னை நீங்கி சென்றவர் பின் செல்லாத கண்ணியம் காம நோய் தோற்றியவர்களுக்கு கிடையாது.

செற்றார் - விலகியவர்

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

ஊடலால் நீங்கியவர் பின் செல்ல வேண்டி ஏற்பட்ட காம நோயின் தன்மை தான் என்ன?

எற்று - எத்தன்மையது

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

என் காமத்துக்குக் காரணமானவர், நான் அக்காமத்தால் விரும்பியவற்றை செய்யும் போது வெட்கம் என்ற ஒன்றை அறியாதிருந்தேன்.

பெட்ப - விரும்பியவை

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

விந்தைகள் பல காட்டி என் மனங்கவர்ந்தவன், பணிவிடை செய்பவன் போல் பேசிய பணிவான மொழிகள் அல்லவா நம் பெண்மைக்குரிய குணங்களை விலகச் செய்கின்றன!

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

அவருடன் பிணங்குவேன் என்று சென்றேன். ஆனால் என் நெஞ்சம் அவருடன் கலந்து விட்டதைக் கண்டு அவரைத் தழுவினேன்.

புலப்பல் - பிணங்குதல்
புல்லினேன் - தழுவுதல்

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

தீயில் இட்ட கணமே உருகும் நெய் போன்ற மனம் உடையவர்களுக்கு புணரும் போது ஊடல் நிலையில் இருப்பது இயலாது.

நிணம் - நெய், கொழுப்பு

No comments: