Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - ஆள்வினை - உடைமை - 62

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

நம்மால் இயலாத செயல் என்று தளராமல் முயற்சி செய்தால் அது செயலுக்கான உறுதியைத் தரும்.

அசாவாமை - அசராமல்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலற்று இருத்தலை ஒழித்தல் வேண்டும். அவ்வாறின்றி செயலை முடிக்காமல் விட்டவரை உலகம் கருதாது.

ஓம்பல் - ஒழித்தல்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.


முயற்சிக்கும் பண்பு உடையவரிடம் உதவுதல் என்னும் பெருமை தங்கும்.

தாள் - முயற்சி

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

முயற்சி இல்லாதவர் செய்யக் கூடிய உதவி வீரமற்ற பேடி வாள் வீசும் தன்மை போல் பயனில்லாதது.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

இன்பத்தை நாடாமல் தன் செயலிலே கருத்தாக உள்ளவன் தன் சுற்றத்தாரின் துன்பம் துடைத்து தாங்கும் தூணாக இருப்பான்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

முயற்சி செல்வத்தை சேர்க்கும் வழி; முயலாமை இல்லாமையை (வறுமையை) ஏற்படுத்தும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

சோம்பல் உடையவனிடம் மூதேவி குடியிருப்பாள்; சோம்பலை ஒழித்து முயற்ச்சிப்பவனிடம் தாமரை மலரில் இருப்பவள் (திருமகள்) தங்குவாள்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

விதிப் பயன் இல்லாததது எவருக்கும் பழி இல்லை. அறிவினால் அறிந்து செய்யும் செயல் இன்றி இருப்பது பழித்தலுக்கு உரியது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இறைவனால் இயலாதது எனினும் தன் உடல் வருத்தி செய்யும் முயற்சி நன்மை தரும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

மனம் தளராமல் முயற்சி செய்பவர் விதியையும் புறங்காணச் செய்வர்.

No comments: