Saturday, November 17, 2007

பொருட்பால் - ஒழிபியல் - இரவு - 106

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

வறுமையில் இருப்பவர் கொடுக்கும் தன்மை உடையவரிடம் இரந்து கேட்கலாம். அவர் தரவில்லை எனில் அவருக்குத் தான் பழி ஏற்படும்.

கரப்பு - மறைத்தல்

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

துன்பம் இன்றி இரந்து பெறுவது ஒருவருக்கு இன்பமே. இரப்பவர் துன்பப்படாதவாறு ஈதல் வேண்டும்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

திறந்த மனதோடு ஈதல் தம் கடமை என உணர்ந்தவரிடம் இரந்து நிற்பதும் பெருமையே.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

இருப்பதை இல்லையென்று கனவிலும் கூறாதவர் முன் இரந்து கேட்டல் கொடுப்பது போன்றதே.

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

இருப்பதை இல்லையென்று சொல்லாதவர்கள் இருப்பதால் தான் அவர்களிடம் சென்று இரப்பவர்கள் உள்ளனர். இல்லையெனில் யாரிடமும் இரந்து கேட்காமல் உயிர் விடுவர்.

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

இருப்பதை இல்லையென்று சொல்லும் நோய் இல்லாதவர்களைக் கண்டால் வறுமையால் வரும் துன்பம் உடனே அழியும்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

இரப்பவரை இகழ்ந்து எள்ளாமல் தருபவரைக் கண்டால், இரப்பவர் எள்ளம் மகிழ்ந்து உவக்கும்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

வறுமையால் இரப்பவர் இல்லை எனில் ஈரம் நிறைந்த இந்தப் பெரிய உலகம் உயிரற்ற மரப்பாவைகள் உலவும் இடமாகத் தோன்றும். இரப்பவர் இல்லை எனில் ஈவது இல்லை, ஆதலால் அனைவரும் உயிரற்றவர்கள்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

இரந்து கொள்பவர் இல்லாத போது, கொடுப்பவருக்கு புழ் உண்டாகும் வழி இல்லை.

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

இரந்து கேட்பவன் இல்லையென்போரிடம் சினம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறரிடமும் வறுமை துன்பம் இருக்கலாம் எனபவதற்கு அவன் வறுமையே சான்று.

கரி -சான்று

No comments: