Monday, November 19, 2007

காமத்துப்பால் - கற்பியல் - புலவி நுணுக்கம் - 132

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பெண் இயல்பை உடையவர்கள் பொதுவில் உன் மார்பை கண்ணால் உண்டதால் பரத்தன் ஆன உன் மார்பை நான் விரும்பேன்.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

காதலருடன் நான் ஊடிப் பேசாது இருந்த போது தும்மினார் 'நான் நீடு வாழ்வீர்' என வாழ்த்திடுவேன் என்றெண்ணி.

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

வளைந்த பூமாலையை அணிந்திருந்தாலும் வேறு ஒருத்திக்கு இந்த வடிவைக் காட்டுவதற்காகத் தான் சூடியதாகப் பிணங்குவாள்.

கோட்டுப் பூ - வளைந்த மாலை

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

அனைவரிலும் நாம் இருவரும் சிறந்த காதலர்கள் என்று கூறியதற்கு வேறு பெண்கள் யாரினும் எல்லாம் என்று கேட்டுப் பிணங்குவாள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

இப்பிறப்பில் பிரியேன் என்று காதலால் கூறியதற்கு மறுமையில் பிரிவேன் என்று பொருள் கொண்டு கண்களில் நீர் கொண்டாள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

பிரிவிலும் உன்னை நினைத்திருந்தேன் என்று கூறியதற்கு 'ஏன் மறந்தீர், மீண்டும் நினைப்பதற்கு' என்று என்னைத் தழுவாமல் பிணங்கினாள்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

நான் தும்மிய பொழுது முதலில் வாழ்த்தியவள் பின் நிறுத்தி, 'நான் இங்கிருக்க யார் நினைத்து தும்மினீர்' என்று பிணங்கி அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

ஊடலை அஞ்சி தும்மலை அடக்கினால் 'உனக்குப் பிடித்தவர் நினைப்பதை எனக்கு மறைக்க நினைத்தீரோ' என்றுப் பிணங்கி அழுதாள்.

செறுப்ப - அடக்குதல்

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

பிணங்கியவளை ஆற்றி மகிழ்வித்தாலும் 'பிற மகளிரிடமும் இப்படித் தான் பழகிவீரோ' என்று மீண்டும் பிணங்கினாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

அவள் அழகை எண்ணி இமை கொட்டாமல் பார்த்திருந்த போதும் 'யாருடன் ஒப்பிட்டு என்னை நோக்கினீர்' என்று பிணங்குவாள்.

No comments: