Sunday, November 18, 2007

காமத்துப்பால்- கற்பியல்- உறுப்பு நலனழிதல்-124

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

சிறுமை நம்மிடம் கொண்டு நிற்க நெடுந்தூரம் சென்று விட்ட தலைவனை எண்ணி நறுமலரை காண நாணி நிற்கின்றனதைப்போன்று அழுதழது ஒளியிழந்து விட்டன என் கண்கள்
சேண் - தூரம்

-- முன்னம் 112 அதிகாரத்தில்
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

தலைவியின் கருங்குவளைக் கண்கள் அளவினுக்குத் தாம் அழகாய் இல்லையே என்று வெக்கி குவளை மலர்கள் அனைத்தும் தலைகுனிந்தன, அப்படின்னு தலைவனால் வருணிக்கப்பட்ட அழகிய கண்களைக் கொண்ட தலைவி, இன்று தலைவனைப் பிரிந்திருப்பதால், அவனையே நினைத்து நினைத்து, அழுதழுது கண்கள் ஒளி இழந்து அழகிழந்து போனதால், இப்போது தலைவியின் கண்கள் மலர்களைக் கண்டு நாணுகின்றன.

-- ஒளிமிகுந்த அழகிய கண்கள் மணம் வீசும் அழகிய மலர்களுக்கு நாணுகின்ற சிறுமையை எனக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டார், என் தலைவர்.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

கண்கள் நிறமிழந்து ஒளியிழந்து நீர் சொரிவது என்னை விரும்பியவரின் அருளில்லாமையை சொல்கின்றன போலும்.
பசந்து- நிறம் வேறுபட்டு

--என் கண்கள், என் காதலரின் அருளில்லாத தன்மையை மற்றவர்க்குத் தெரிவிப்பதைப் போல் பசலைத் தன்மையடைந்து, நீர் ததும்பி நிற்கின்றன.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

மணந்த அன்று பூரிப்பால் வீங்கிய தோள்கள் தலைவனின் பிரிவை அறிவிக்கின்றன போல் இன்று வாடுகின்றன
தணந்தமை - பிரிந்தமை

-- தலைவன் என்னுடன் இருந்த காலத்தில் பருத்து பொலிவுடன் இருந்த என் மென்தோள்கள், தலைவர் என்னைப் பிரிந்திருக்கிறார் என்பதை ஊருக்கு வெட்டவெளிச்சமாகக் காட்டும் வண்ணம், இப்போது மெலிந்து போய் இருக்கின்றன .

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

செயற்கையழகு மட்டுமின்றி பழைய இயற்கை அழகும் நீங்கி பெருமையிழந்து வளையல்கள் கழலும் வகையில் சோர்ந்து போகின்றன என் துணையை நீங்கி நான் வாழ்வதால்
தொல்கவின்- பழைய அழகு - மிக அழகிய தமிழ்வார்த்தை என்பதால் குறிப்பிடுகிறேன்.
பணை- பெருமை
பைந்தொடி - வளையல்

-- அன்புநாதனே! அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்;
அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்---
சங்கமம் திரைப்படத்தில் "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா... " என்ற பாடலில் வரும் கருத்தும் இதனை ஒத்தது தான்.

-- என் துணைவனைப் பிரிந்து நான் வாடுவதால், பருத்து, மிகுந்த பொலிவுடன் விளங்கிய என் தோள்கள், அதன் பெருமையை இழந்து, கையில் அணிந்துள்ள வளையல்களெல்லாம் கழன்று விழும் அளவினுக்கு சோர்ந்து மெலிந்துவிட்டனவே.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

கொடியவரின்(காதலரின்) கொடுமையை(பிரிவை) உரைக்கும் வண்ணம் பழைய அழகையிழந்து வளையலும் கழலும் வண்ணம் வாடிவிட்டன என் தோள்கள்.

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

என் வளையல் கழலும் வண்ணம் நெகிழந்த தோள்களைக் கண்டு என் காதலரைக் கொடியர் எனக்கூறல் என்னை நோகச்செய்கிறது

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

என் நெஞ்சே! நீ சென்று என் காதலரிடம், என் தோள்களின் ஆரவாரத்தைக்(பூசலை) கண்ட (தோழி) , கொடியார் என்று உரைக்கின்ற நிலையை அடைந்தது என்று உரைத்து ஒரு மேம்பாட்டை அடையவல்லையோ?

-- நெஞ்சே! என்னைத் தனிமையில் துன்புறச் செய்துவிட்டுப் பிரிந்து சென்றதால் கொடியவரான என் காதலரிடம் சென்று, வாடுகின்ற என் தோள்களின் ஆரவாரத்தை எடுத்துக்கூறி, நீ புகழ் பெறுவாயாக!

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

முயங்கிய போது ( இறுக அணைத்த போது) வலிக்குமோ என்று ஒரு கணம் தளர்த்தினேன் அப்போது, அதைப்பொறாமல் வளையல்களை அணிந்த என் தலைவியின் நெற்றியானது அதற்கே பசந்தது( நிறம் வேறுபட்டது).(அப்படியாயின் இந்தப் பிரிவை அவள் எங்கனம் தாங்குவாள்)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

முயங்கிக்கிடக்கையில் குளிர்ந்த காற்றானது இடைபுக கண்ட பேதையினது பெரிய குளிர்ந்த கண்கள் பசந்தது(அவ்வாறாயின் இப்போது பெரும் இடைவெளியை எவ்வாறு பொறுப்பாள்)
போழ - நுழைந்த

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

நெற்றியில் விளைந்த பசப்பைக் கண்டு கண்ணின் பசப்பு மேலும் துன்பமடைந்தது.
பருவரல்- துன்பம்

1 comment:

தமிழ் said...

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

சேட்(சேண்) - நெடுந்தொலைவு
உள்ளி - நினைத்து
நறுமலர் நாணின கண் - மணம் வீசும் மலர்கள், என் கண்களைக் கண்டு நாணின

பொருள்:

முன்பெல்லாம், மணம் வீசும் அழகிய நல்ல மலர்கள் அனைத்தும், என் கண்களைக் கண்டு நாணின. ஆனால், என்னைப் பிரிந்து நெடுந்தொலைவு சென்ற காதலரை நினைத்து அழுதழுது ஒளியிழந்த என் கண்கள் அம்மலர்களைக் கண்டு நாணும் சிறுமையை எனக்களித்து விட்டு, நீ நெடுந்தொலைவு சென்றாய்.