Sunday, November 18, 2007

காமத்துப்பால் - கற்பியல்- நினைத்தவர் புலம்பல்-121

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

முன் அனுபவித்த இன்பத்தை நினைத்தாலும் அப்போது தீரா பெரு மகழ்ச்சியைத்தருவதால் கள்ளைவிட காமமே இன்பத்தை தருவது

-- தேன் என்ற சொல் தித்தித்திடுமா? இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா? ஆனால், காதல் என்பதோ, சொல்லவும் தேவையில்லை, நினைத்தாலே போதும் அது முடிவில்லாத, பெரு மகிழ்ச்சியைத் தரும் தன்மையது.

கள்ளானது, அதை உண்ட சிறிது நேரத்திற்கு மட்டுமே இன்பம் தரும். ஆனால், காதலானது, மெய்யால் அனுபவிக்காவிடினும், நினைத்தாலே போதும், அது அளவில்லா பேரின்பத்தைத் தரவல்லது. அதனால் கள்ளை விட காதலே இன்பம் தருவதில் சிறந்ததாகும்.

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏஇல்.

தம்மால் காதலிக்கப்படுபவரை நினைப்பதுவே இன்பம் ஆகும்.(அ-து) பிரிவுத்துன்பம் இல்லாமல் போகின்றது. ஆதலால், காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

தும்மல் வருவதைப்போன்று தோன்றி மறைந்தது( அதனால் என் காதலர்) என்னை நினைப்பது போன்று தோன்றி நினைக்காது விட்டார் போலும்

-- தும்மல் வருவது போல் வந்து, பாதியிலேயே அடங்கிவிடுகிறதே! அப்படியானால், என் காதலர் என்னை நினைவுகூர்ந்தும் நினையாமல் இருக்கின்றாரோ??

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

எம் நெஞ்சத்தில் அவர் எப்பொழுதும் உள்ளார் அதைப்போலவே நானும் இருக்கின்றோமோ?

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

தம் நெஞ்சத்தில் என்னை காவல்கொண்ட தலைவர் எமது நெஞ்சத்தில் ஓயாமல் வருவதற்கு நாணாரோ?

-- என் காதலர், அவர் மனதிற்குள் என்னை அனுமதிக்காமல் காவல் காப்பவர், என் மனதிற்குள் மட்டும் ஓயாது வருவதற்கு அவருக்கு நாணமில்லையோ??

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

நான் அவரோடு புணர்ந்த இன்பத்தை நினைப்பதால் (பிரிவுற்ற வேளையில்) இத்துன்பத்தில் உயிர்வாழ்கின்றேன் அது இல்லையாயின் வேறு எதனால் உயிர்வாழ்வேன்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

அவரை மறந்தால் நான் என்ன ஆவேனோ? அவரை மறப்பதற்கு நான் அறியேன்; அவரை நினைத்தாலும், நினைக்கையில் பிரிவானது என் உள்ளத்தைச் சுடுகின்றது.

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

காதலரை எவ்வளவு மிக நினைத்தாலும் கோபிக்கமாட்டார் இதுவன்றோ எனக்கு அவர் செய்யும் சிறப்பு

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

முன்னர் நாமிருவரும் வேறல்ல என்று சொல்லுவாரது அருளில்லாமையை நினைத்து நினைத்து என் இன்னுயிர் கழிகின்றது

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

சந்திரனே, வாழ்வாயாக! என்னெஞ்சை விட்டு நீங்காமலிருந்து, என்னை விட்டுப் போயினாரான என் காதலர், என் கண் பார்வையில் எதிர்ப்படும் வரை மறையாதிருப்பாயாக.

No comments: