Wednesday, November 14, 2007

பொருட்பால் - நட்பியல் - கூடாநட்பு - 83

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

அகத்தில் கூடாமல் நம்முடன் கலந்தவர் நட்பு, தருணம் வாய்க்கும் பொழுது நம்மை சாய்க்க எறியப்படும் பட்டடை போன்றது.

நேரா - கூடாமல்
நிரந்தவர் - கூடியவர்
பட்டடை - இரும்பை வைத்து பிளக்க உதவும் கல், பள, பளப்பான மேற்புறம் கொண்ட வலிவான இரும்பு போன்ற பொருள்கள் தரப்பட்டுள்ளன.


இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

நம்மில் ஒருவர் போல நடிப்பவரிடம் கொள்ளும் நட்பு வைத்திருக்கும் பொருளின் அளவாய் வேறுபடும் விலைமகளிர் மனம் போன்றது.

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

நல்லவை பல கற்றாலும் மனத்தால் நல்லவராதல் பகை மண்டிய குணம் படைத்தோருக்கு இயலாது.

மாணார் - சிறப்பில்லாத பகைவர்

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

முகத்தால் இனதே நகைத்து அகத்தால் வருபாதவரின் நட்பை அஞ்சி விலக்க வேண்டும்.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

மனத்தால் நண்பராக அமையாதவரை பேசும் சொற்களால் மட்டும் நண்பராகக் கொள்ளக் கூடாது.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

நண்பர் போல் நமக்கு நல்லது சொல்வாராயினும் பகைவரின் சொற்கள் விரைவிலேயே உணரப்படும்.

ஒட்டார் - பகைவர்

ஒல்லை - விரைவில்

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

வில் வளைந்தால் விளையும் தீமை ஏற்படுத்துவதால் பகைவரின் வாய்ச்சொல் வணக்கத்தை ஏற்க வேண்டாம்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

பகைவர் நம்மை வணங்கும் கையிலும், அழுது விடும் கண்ணீரிலும் நம்மை ஒழிக்கும் படைக்கலன் வைத்திருப்பர்.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

பிறத்தில் நம் நண்பர் போல் நடித்து மனதால் நம்மை இகழுபவரை, நாமும் சிரித்துப் பழகி அவர் அழியும் படி செய்யலாம்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

பகைவர் நம் நண்பராய் வரும்போது நாமும் முகத்தால் சிரித்து, அகத்தால் விலகி விட வேண்டும்.

No comments: