Friday, November 09, 2007

பொருட்பால் - அரசியல் - வெருவந்த - செய்யாமை - 57

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

நடுநிலையுடன வழக்கை ஆராய்ந்து மீண்டும் தவறு நிகழா வண்ணம் தவறுக்கு ஏற்றவாறு ஒறுப்பது மன்னன் கடமை.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

ஆக்கம் நெடுங்காலம் வேண்டும் எனின் ஒருவருடைய தவறை அளவோடு கடிந்து, சினம் காட்ட வேண்டும்.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிமக்கள் அஞ்சும் செயலைச் செய்யும் கொடுங்கோல் மன்னன் விரைந்து கெடுவான் என்பது உறுதி.

வருவந்த - அஞ்சத் தக்க
ஒருவந்தம் - உறுதியாக


இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

கடுமையானவன் என்று குடிகள் கூறுமளவு துன்பம் தரும் சொல் பேசும் மன்னன் ஆயுள் குறைந்து, தன் செல்வத்தை விரைவில் இழப்பான்.

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

எளிதில் அணுக முடியாமலும், கடுமையுடனும் காணப்படும் மன்னனின் பெருஞ்செல்வம் பேய் காக்கும் பொருள் போன்றது.

செவ்வி - காலம்

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

கடுஞ்சொல் பேசி, அன்பில்லாமல் நடந்து கொள்ளும் மன்னனின் செல்வம் நிலைத்திருக்காது.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

கடுஞ்சொல் பேசுவதும், கடுமையாக ஒறுத்தலும் மன்னனின் பகை வெல்லும் வலிமையை தேய்க்கும் அரம் ஆகும்.

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.

தன்னுடன் இருப்பவர்களை கலந்து ஆராயாமல் சினம் கொண்டு சீறும் மன்னனின் செல்வம் சிறுத்து விடும்.

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

தனக்கு வேண்டிய பாதுகாப்பை அமைத்துக் கொள்ளாத மன்னன் பகை வரும் போது அஞ்சி விரைவில் அழிவான்.

செரு - பகை
சிறை - காவல்

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

கல்லாதவரை உடன் வைத்திருக்கும் கடுங்கோல் மன்னன் போல் நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

பொறை - சுமை

No comments: