Wednesday, November 14, 2007

பொருட்பால் - நட்பியல்- புல்லறிவாண்மை-85

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

இல்லாமையிலே மிக அதிகமான இல்லாமையாக கொள்ளப்படுவது அறிவின்மையே. பொருளில்லாத்தைக்கூட இவ்வுலகத்தார் இல்லாமையாக கருதமாட்டார்.

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

அறிவில்லாதவன்( புல்லறிவுடையவன்) ஒன்றை மனமுவந்து ஈந்தால் அது பெறுகின்றவனுடைய முன்வினையே தவிர வேறொன்றுமில்லை.
அதாவது அறிவு குறைந்தவன் ஈகை செய்யமாட்டான் என்று கருதலாம்.



அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

புல்லறிவார் தமக்கு தாமே வருத்தும் செயல்களை (தன் அறிவின்மையால்) செய்வர். அவை எவ்வளவு கொடுமையானது எனில் அத்தகைய கொடுமையை எதிரிகள் கூட செய்யமாட்டார். தன் அறிவின்மையால் அவ்வளவு வருந்துவர்.

பீழை- வருத்தம்.


வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

புல்லறிவென்பது யாது எனின் அது தனக்கு நல்லறிவு இருக்கிறது
என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் மயக்கமே



கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

புல்லறிவாளர் கற்காத நூல்களையும் கற்றது போல் நடந்து ஒழுகுவதால்
அவர் கசடற கற்றதையும் சந்தேகம் கொள்ள வைக்கும்.

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

தன்னுடைய குற்றங்களை அறிந்து மறைக்கும் வழி காணமால் வாழுபவர்
மறைக்கவேண்டிய அவயவத்தை மறைத்தாலும் மானமிழந்த புல்லறிவுடையவரே.


அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

பெறுதற்கரிய அருமறையை( அறிவுரைகளை) தன் அறிவின்மையால் மறுக்கும் புல்லறிவாளன்
தனக்குத்தானே மிகுந்த தீமையை செய்வதனாகிறான்.


ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

அறிவுடையோர் கூறுவதையும் செய்யாமல் தானாகவும் தேறாமல் வாழும் உயிரானது தன் உடம்பைவிட்டு
போகும் வரைக்கும் இப்பூமிக்கு ஒரு நோய்

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

புல்லறிவாளனுக்கு ஒருவன் (அறிவிலலாவதன்) காணத ஒன்றை விளக்க முற்படுவது அறிவீனம்(முற்படுவன் அறிவில்லாதவனாகிறான்)
புல்லறிவாளனோ தான் அதை கண்டவாறு (புரிந்துகொண்ட வகையில்) அதை சரியாக முழுமையாக புரிந்துகொண்டவன் என்று கருதிக்கொள்கிறான்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

உலகத்தார் எல்லோரும் உண்டு என்று கூறும் பொருளை இல்லை என்று கூறுவோன் இவ்வுலகத்தில் பேய் என்று கருத்தப்படுவான்.

No comments: