Monday, November 19, 2007

காமத்துப்பால் - கற்பியல் - அவர்வயின் - விதும்பல் - 127

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

நாளை சுவரில் ஒற்றி கணக்கிட்டு விரல் தேய்ந்தது; ஒளி இழந்து, நலிவுற்று விட்டேன். இன்னும் அவர் வரவில்லை.

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

ஒளிவீசும் அணிகலன் போன்றவளே, பிரிவின் துயர் வாட்டாதிருக்க இன்று அவரை மறந்தால் என் தோள் அழகு இழந்து மெலிந்து வளையல் கழன்று விழும்படி ஆகுமே.

இலங்கிழாய் - ஒளிவீசும் அணி
கலன் - தோளில் அணியும் நகை
காரிகை - அழகு

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

தன் தொழில் காரணமாக ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர் வருவார் என்ற ஆசையில் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காமத்தில் கூடிப் பிரிந்தவர் வரவினை எண்ணும் போதெல்லாம் என் உள்ளம் மேலும் கூடிய உவகை கொள்கிறது.

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

என் தலைவனை நான் கண்ணார கண்டபின் என் தோள்களில் ஏற்பட்ட பசலை தானே நீங்கும்.

கொண்கன் - தலைவன்
பசப்பு - பிரிவில் மகளிர் அழகு குன்றச்செய்யும் நோய்

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என் தலைவன் வரும் நாளில் எனக்குத் துன்பம் தரும் நோய் தீர்க்கும் மருந்தை அவனால் அருந்துவேன்.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்.

என் கண்களை ஒத்த அன்பர் வரும் போது அவருடன் பிணங்குவேனா? இல்லை, தாள இயலாமல் தழுவுவேனா? இல்லை, இரண்டையும் கலந்தே துய்த்து மகிழ்வேனா? (ஆவலில் ஒன்றும் புரிபட வில்லை)

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

வேந்தன் மேற்கொண்ட செயலில் வெற்றி அடையும் பொழுது நானும் என் மனைவியுடன் மாலை விருந்தில் துய்ப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

தொலைவு சென்றவர் திரும்பி வரும் நாள் பார்த்து ஏங்குபவருக்கு ஒரு நாள் ஏழு நாள் அளவு நீண்டதாகத் துன்பம் தரும்.

சேண் - தொலைவு

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

பிரிவின் துயர் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்தபின் அவர் அன்பைப் பெறுவதாக இருந்தால் அவ்வன்பை பெற்றதால் பயன் என்ன? இல்லை, மெய்யுறக் கலந்து தான் ஆவதென்ன?

1 comment:

Anonymous said...

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

வாளற்று - ஒளியிழந்து, புற்கென்ற - புல்லிய(கண்கள் பார்வையிழந்து)....

ஒளியிழந்து, புல்லியனவாயின என் கண்கள்; அவர் என்னைப் பிரிந்து சென்ற நாட்களை எண்ணி எண்ணி என் விரல்கள் தேய்ந்து போயின; என்றாலும் அவர் இன்னும் வரவில்லை.

நீங்கள் எழுதிய பொருள் சரியானதே; ஆனால், வாளற்று, புற்கென்ற என்னும் குறிப்பு எந்த உறுப்பைக் குறிப்பிடுகின்றது என்று குறிப்பிடவில்லை.