Saturday, November 17, 2007

பொருட்பால் - ஒழிபியல் - நல்குரவு - 105

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

வறுமையை விட துன்பமானது எதுவும் இல்லை.

இன்மை எனவொரு பாவியால் மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

வறுமை வந்தால் ஈவது இயலாது; அதனால் மறுமை கிடையாது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகமும் இல்லை.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

பழைய சுற்றத்தாரின் வரவையும், அவர்களை வரவேற்கும் சொல்லையும் சேர்த்துக் கெடுக்கும் வறுமை என்னும் இவறல்.

தொல்வரவு - பழைய உறவு
தோல் - சொல்
நசை - ஆசை என்ற பொருள் பல இடங்களில் காணப்பட்ட போதும் இவறல் (கஞ்சம்) என்ற சொல் மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

நல்ல குடிப் பிறந்தவரிடத்தும் வறுமையானது இகழ்வு ஏற்படுத்தும் சொல் பிறக்குமாறு சோர்வு ஏற்படுத்தும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

வறுமை என்னும் துன்பம் பல தரப்பட்ட துன்பங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

அறம் பற்றி நன்கு உணரந்து சொன்னாலும் வறுமைப்பட்டவர் சொல்வதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

நல்கூர்ந்தார் - வறியவர்

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

அறம் தவறி வறுமைப்பட்டவன் பெற்ற தாயாலும் பிறன் போல் பார்க்கப் படுவான்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

முன்னர் என்னை துன்பத்தில் ஆழ்த்திய வறுமை இப்பொழுதும் வருமோ?

நெருநல் - நேற்று
நிரப்பு - வறுமை


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

நெருப்பினில் கூட உறங்குவது இயலும். ஆனால், வறுமையில் துயல்வது இயலாத ஒன்றே.

கண்பாடு - தூக்கம்

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

நுகர்வதற்கு எதுவுமின்றி (தவறான வழியில்) வறுமைப் பட்டு, உயிரை முழுதும் துறக்காமல் இருப்பது உப்பிற்கும் கஞ்சிக்கும் கேடு.

துவற - முழுமையாக
காடி - கஞ்சி

1 comment:

தமிழ் said...

நசை - ஆசை
ஆசை யே வறுமைக்குக் காரணமாகும். ஆகவேதான், நல்குரவை(வறுமை) ஆசை என்று கூறியிருக்கிறார் ஐயன் வள்ளுவர்.

தமிழ்