Saturday, November 17, 2007

பொருட்பால் - ஒழிபியல் - நாணுடைமை - 102

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

நாணுதல் என்பது பழி உண்டாகும் செயலுக்காக நாணுதல் மற்றும் அழகிய நெற்றி உடைய நல்ல குடிப் பெண்கள் நாணுதல் ஆகும்.

திரு நுதல் - அழகிய நெற்றி

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

உணவு, உடை மற்றும் பிற தேவைகள் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. பழிக்கு அஞ்சும் நாணம் உடைமையே அவர்களுக்கு சிறப்பு.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

உயிர்களுக்கு உடம்பே இருப்பிடம். அதுபோல், பழிக்கு நாணுவது என்னும் நல்ல குணம் மேன்மையின் குடி இருப்பு ஆகும்.

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

பழிக்கு அஞ்சும் குணம் சான்றோர்களுக்கு அணிகலன். அது இல்லையெனில், அவர்களின் பெருமிதமான நடை நோயுற்றது போல் ஆகும்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

பிறர் பழிக்கும் தம் பழி போல் நாணுபவர், அவ்வாறான நாணத்தின் உறைவிடமாகக் கருதப் படுவார்.

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

மேன்மக்கள் பழிக்கு அஞ்சுவதை தமது மேன்மைக்கு காவலாகக் கொள்வார்கள் அன்றி இப்பரந்த உலகை கொள்ளார்.

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

பழிக்கு அஞ்சும் குணமுடையவர் பழி ஏற்பட்டால் உயிரை விடுவார்களன்றி, உயிர் வாழ்வதற்காக பழி வரும் செயல் செய்ய மாட்டார்கள்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

பிறர் நாணத் தக்கது என்ற செயலை நாணாமல் செய்பவரை விட்டு அறநெறி வெட்கி விலகும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

ஒழுக்கம் வழுவினால் குலப்பெருமை குன்றும். பிறர் பழிக்கும் செயலுக்குத் துணிந்தால் பிற நலன்கள் அனைத்தும் அழியும்.

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

மனத்தில் நாணம் இல்லாதவர் இயக்கம் உயிரற்ற நூல் கொண்டு ஆடும் மரப்பாவையின் இயக்கம் போன்றது.

1 comment:

தமிழ் said...

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்!